ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றவுடன், அங்கு தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், அனைத்து அணிகளும் முன்கூட்டியே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றன. இன்று முதல் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும் சீனியர் ஸ்பின்னருமான ஹர்பஜன் சிங், தனது அணியுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவில்லை. ஹர்பஜன் சிங்கின் தாயின் உடல்நிலை சரியில்லை. அதனால் தான், அவர் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்து நாட்கள் பயிற்சி முகாமில் கூட கலந்துகொள்ளவில்லை. 

ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் சிஎஸ்கே அணியுடன் இணைந்து அவர்கள் யுஏஇ செல்கிறார்கள். தாயின் உடல்நிலை சரியில்லாததால், 2 வாரங்களுக்கு பிறகு ஹர்பஜன் சிங் ஐக்கிய அரபு அமீரகம் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

2008லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங்கை, 2018 ஐபிஎல் சீசனில், ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணியில் தொடர்கிறார். ஐபிஎல்லில் 160 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் 11 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.