இந்திய அணியின் தற்போதைய தேர்வுக்குழு சந்தித்த விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் இதுவரை இருந்த எந்த தேர்வுக்குழுவும் சந்தித்ததில்லை, இனிமேல் வரப்போகும் எந்த தேர்வுக்குழுவும் சந்திக்குமா என்பதும் சந்தேகம். அந்தளவிற்கு எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கழுவி ஊற்றியுள்ளனர். 

உலக கோப்பை அணிக்கு தயாராகும் விதமாக 2017ம் ஆண்டிலிருந்து இந்த தேர்வுக்குழு செய்த வீரர்கள் தேர்வு, உலக கோப்பைக்கான அணி தேர்வு, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அணி தேர்வு என அனைத்துமே சர்ச்சைதான்.

உலக கோப்பைக்கு நான்காம் வரிசை வீரரை தேடும் படலத்தில், எந்த வீரருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. நன்றாக ஆடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவில்லை. பின்னர் அம்பாதி ராயுடு நான்காம் வரிசைக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உலக கோப்பை அணியில் அவர் கழட்டிவிடப்பட்டு திடீரென விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். உலக கோப்பையின் இடையே தவான் காயத்தால் வெளியேறிய நிலையில், ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டார். 

விஜய் சங்கர் காயத்தால் வெளியேறியதை அடுத்து மயன்க் அகர்வால் எடுக்கப்பட்டார். மயன்க் அகர்வால் அதற்கு முன்னர் இந்திய ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டதேயில்லை. திடீரென உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். அவர் ரோஹித்தும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது கிரிக்கெட் பார்க்கும் சின்ன பையனுக்கு கூட தெரியும். அப்படியிருக்கையில், மயன்க் அகர்வாலை எதற்கு எடுக்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் அவரை எடுத்தனர். ஆக மொத்தத்தில் கடைசிவரை ராயுடுவை மட்டும் எடுக்கவேயில்லை. அதேபோல மிடில் ஆர்டரில் இறங்க ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டதே விமர்சனத்துக்குள்ளானது. 

உலக கோப்பைக்கு பின்னர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நான்காம் வரிசையில் இறக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், சிறப்பாக ஆடி அந்த இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது அடுத்த சர்ச்சை தேர்வை செய்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது தேர்வுக்குழு. 

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவருகிறது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் எடுக்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், அவரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான அணியில் புறக்கணித்துள்ளனர். 

வாய்ப்பே கொடுக்காமல் அவரை புறக்கணித்தது ஏன் என்ற கேள்வி சர்ச்சையாக எழுந்தது. பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்பி சசி தரூர், சாம்சன் புறக்கணிப்பு குறித்த தனது அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார். 

அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட சசி தரூர், வாய்ப்பே கொடுக்காமல் சஞ்சு சாம்சனை புறக்கணித்தது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. 3 டி20 போட்டிகளில் அவரை டிரிங்ஸ் தூக்கிச்சென்ற அவரை, எந்தவித காரணமுமில்லாமல் உடனடியாக அணியிலிருந்து தூக்கிவிட்டனர். அவரது(சாம்சன்) பேட்டிங்கை டெஸ்ட் செய்கிறார்களா அல்லது மனதை டெஸ்ட் செய்கிறார்களா? என்று தனது அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். 

அதற்கு பதிலளித்து டுவீட் செய்த ஹர்பஜன் சிங், கண்டிப்பாக அவரது இதயத்தைத்தான் டெஸ்ட் செய்கிறார்கள். தற்போதைய தேர்வுக்குழுவை நீக்கிவிட்டு தரமான வலுவான திறமையான தேர்வாளர்களை தாதா நியமிப்பார் என்று நம்புவதாக டுவீட் செய்துள்ளார்.