ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் சிஎஸ்கே அணியின் பிரச்னைகளை லிஸ்ட் போட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் அதேவேளையில், பலமுறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன. தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இந்த சீசனில் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி ஆடிவரும் நிலையில், ஜடேஜாவின் கேப்டன்சியில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் தோற்றது சிஎஸ்கே அணி.
கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தும், அந்த ஸ்கோருக்குள் லக்னோ அணியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. தொடர்ச்சியாக 3 தோல்விகளை தழுவிய சிஎஸ்கே அணி, இன்று சன்ரைசர்ஸுக்கு எதிராக முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் என்று ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணிக்கு ஒருசில பிரச்னைகள் உள்ளன. பவர்ப்ளேயில் முதல் 6 ஓவர்களில் நன்றாக பந்துவீசி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் பவுலரான தீபக் சாஹர் ஆடவில்லை. அவரது பணியை செய்யும் வேறு பவுலர் சிஎஸ்கேவிடம் இல்லை. மிடில் ஓவர்களில் (7-15) விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் தரமான ஸ்பின்னர்களும் இல்லை.
அதுமட்டுமல்லாது ருதுராஜ் கெய்க்வாட் சரியாக ஆடவில்லை. சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. இவையனைத்தும் சேர்ந்துதான் பிரச்னையாக உள்ளது. ஆனால் சிஎஸ்கே மாதிரியான சாம்பியன் அணி எப்போது வேண்டுமானாலும் கம்பேக் கொடுக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனின் முதல் 3 போட்டிகளில் சேர்த்தே மொத்தமாக வெறும் 2 ரன் மட்டுமே அடித்துள்ளார். அவருக்கு இன்னும் சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. அதனால் சிஎஸ்கே அணிக்கும் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. பவுலிங்கில் தீபக் சாஹர் இல்லாததும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
