Asianet News TamilAsianet News Tamil

அவங்க 4 பேருக்கும் என்ன நடந்துச்சுனே தெரியாது.. பாண்டிங் அவரையே அம்பயரா நெனச்சுகிட்டாரு! கிழித்தெறிந்த ஹர்பஜன்

ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை குரங்கு என்று கிண்டலடித்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். 
 

harbhajan singh shares about 2008 monkeygate incident
Author
Chennai, First Published Jun 14, 2020, 2:48 PM IST

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பிரபலமான சர்ச்சைகளில் ஒன்று, ஹர்பஜன் - சைமண்ட்ஸ் மோதல். எதிரணி வீரர்களை களத்தில் வரையறையில்லாமல் ஸ்லெட்ஜ் செய்வதை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியதும், அதில் கை தேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியர்கள். அவர்கள் செய்தால் நியாயம்; அதையே எதிரணி வீரர்கள் செய்தால் அதை பிரச்னையாக்குவதிலும் அவர்கள் வல்லவர்கள்.

ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸை குரங்கு என்று திட்டியதாக எழுந்த சர்ச்சை, ஹர்பஜன் சிங்கிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 2007-08ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் சைமண்ட்ஸுடனான மோதலின்போது, அவரை குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதாக சைமண்ட்ஸ் சர்ச்சையை கிளப்பினார். சைமண்ட்ஸின் குற்றச்சாட்டை பாண்டிங், கில்கிறிஸ்ட், ஹைடன் மற்றும் கிளார்க் ஆகிய நால்வரும் வழிமொழிந்து சாட்சி சொன்னார்கள். 

அந்த சம்பவத்தை பற்றி ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில்  இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், 2008 ஆஸ்திரேலிய தொடரில், சிட்னியில் நடந்த டெஸ்ட்டில் ரிக்கி பாண்டிங் தன்னையே அம்பயராக நினைத்துக்கொண்டு செயல்பட்டார். அந்த போட்டியில் ஏகப்பட்ட சர்ச்சை சம்பவங்கள் நடந்தன. களத்தில் நடப்பதை களத்துடன் முடித்துவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் சொல்வார்கள். ஆனால் அதை அவர்கள் பின்பற்றுவதில்லை. எனக்கும் சைமண்ட்ஸூக்கும் நடந்த மோதல், களத்தை கடந்து மிகப்பெரிய பிரச்னையாக உருவாக்கினார்கள்.

harbhajan singh shares about 2008 monkeygate incident

எனக்கும் சைமண்ட்ஸுக்கும் இடையே என்ன வாக்குவாதம் நடந்தது என்பது எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும். எனக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதத்தின்போது, என்னிடமிருந்து ஒரு 6 அடி தொலைவில் சச்சின் மட்டுமே இருந்தார். வேறு யாருமே அங்கு இல்லை. நாங்கள் பேசிக்கொண்டது என்ன என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர், ஹர்பஜன் சிங் குரங்கு என்று திட்டியதை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். அவர்கள் எப்படி கேட்டிருக்கமுடியும்? அவர்கள் யாருமே அந்த இடத்திலேயே இல்லை. அந்த வீடியோ காட்சி இருந்தால் பாருங்கள். சச்சின் டெண்டுல்கர் ஒருவர் தான் எங்களுக்கு பக்கத்தில் நின்றார். ஆனால் அவருக்கே நாங்கள் பேசிக்கொண்டது என்ன என்பது தெரியாது. எனக்கும் சைமண்ட்ஸுக்கும் மட்டுமே தெரியும். 

harbhajan singh shares about 2008 monkeygate incident

ஆனால் என்னை விசாரித்தனர். அது பெரிய பிரச்னையாக வெடித்தது. என்னை மட்டுமே டார்கெட் செய்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், கேமரா மூலம் விரட்டின. எனக்கு மட்டும் ஏன் தொல்லை கொடுக்கின்றனர் என்ற எண்ணம் தான் எனக்கு இருந்தது. மிகவும் கடினமான அந்த சூழலில், கேப்டன் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், பிசிசிஐயும் எனக்கு ஆதரவாக இருந்தனர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios