இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் சும்மாவே அனல் பறக்கும். அதுவும் உலக கோப்பை போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. 

உலக கோப்பை தொடரில் சர்வதேச அளவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை மான்செஸ்டாரில் நடக்கவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி சர்வதேச கவனத்தை ஈர்த்த போட்டி. அதனால் உலகமே இந்த போட்டியை எதிர்நோக்கியுள்ளது. 

இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே கிடையாது. இதுவரை உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிய 6 போட்டிகளிலும் இந்திய அணியே வென்றுள்ளது. எனவே முதன்முறையாக இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை சர்ஃபராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி வீழ்த்துவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் இந்திய அணி அந்தளவிற்கு வலிமையாக உள்ளது மட்டுமல்லாமல் செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 16 ஆண்டுகளுக்கு முன் 2003 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டிக்கு முன் நடந்த சம்பவத்தை ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், 2003 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடந்தது. அந்த போட்டியில் நான் ஆடவில்லை. கும்ப்ளே தான் ஆடினார். அந்த போட்டிக்கு முன்னதாக நான், டிராவிட், கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆகிய நால்வரும் ஒன்றாக சாப்பிட சென்றோம். நாங்கள் அமர்ந்த இருக்கைக்கு பின்னால் அன்வர், வாசிம் அக்ரம், அக்தர், முகமது யூசுஃப் ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

அப்போது நான் விளையாட்டாக பேச ஆரம்பித்தேன். யூசுஃப் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார். அக்தரிடம் என்னை பற்றி தவறாக பேசியது மட்டுமல்லாமல் என் மதத்தை பற்றியும் இழிவாக பேசினார். கோபமடைந்த நான், யூசுஃபின் காலை பிடித்து இழுத்தேன். அவரும் என் காலை பிடித்து இழுக்க, இருவரும் எழுந்தோம். ஃபோர்க்கை எடுத்துக்கொண்டு நான் அவரைநோக்கி கோபமாக செல்ல, அவரும் ஃபோர்க்கை எடுத்துக்கொண்டு வந்தார். இதையடுத்து உடனடியாக யூசுஃபை அன்வரும் அக்ரமும் இணைந்து வெளியே அழைத்து சென்றார்கள். என்னை டிராவிட்டும் ஸ்ரீநாத்தும் அமைதிப்படுத்தி அமரவைத்தார்கள். டிராவிட்டும் ஸ்ரீநாத்தும் யூசுஃப் பேசியது தவறு என்றும் சரியான நடத்தை அல்ல என்றும் எச்சரித்தனர். 

அந்த சம்பவம் நடந்து 16 ஆண்டுகளுக்கு பின் இருவரும் அண்மையில் சந்தித்தபோது, அந்த சண்டையை நினைத்து சிரித்துக்கொண்டோம் என்று ஹர்பஜன் தெரிவித்தார். இந்த சண்டை குறித்து ஏற்கனவே கங்குலி அவரது சுயசரிதையில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.