டெஸ்ட்  அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, தனக்கு இருந்த நெருக்கடியை எல்லாம் மண்டைக்கு ஏற்றாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி சதமடித்தார். 

முதல் இன்னிங்ஸில் 176 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் ரன்களை குவித்தாக வேண்டிய சூழலில் அதிரடியாக ஆடி சதமடித்தார். சதத்திற்கு பின்னர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை விரைவில் உயர்த்தினார். ரோஹித்தின் அதிரடியான ஆட்டம்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மிகக்குறைவான நேரத்தில் அதிகமான ஸ்கோரை எட்ட உதவிகரமாகவும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்யும் சம்பவமாகவும் அமைந்தது. 

முதல் இன்னிங்ஸில் 244 பந்துகளில் 176 ரன்களை குவித்த ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் 149 பந்துகளில் 127 ரன்களை குவித்தார். ரோஹித் சர்மா பெரிதாக பந்துகளை வீணடிக்காமல் ஸ்கோர் செய்தார். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்குவதற்கு முன்பாகவே, சேவாக் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு செய்த பங்களிப்பை ரோஹித்தால் செய்யமுடியும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோலவே ரோஹித் அடித்து நொறுக்கியதும், சேவாக்குடன் ஒப்பிடப்படுகிறார். 

இந்நிலையில், வீரேந்திர சேவாக்குடன் ஒப்பிடப்படும் ரோஹித் சர்மா, சேவாக்கைவிட நல்ல பேட்டிங் டெக்னிக்கை பெற்றிருப்பதாக ஷோயப் அக்தர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதே கருத்தை ஹர்பஜன் சிங்கும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ரோஹித்தை யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. சேவாக் எதிரணியை அடித்து துவம்சம் செய்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். எதிரணிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடுவார். சேவாக்கை விரைவில் அவுட்டாக்கவில்லை என்றால், முதல் நாள் ஆட்ட முடிவிலேயே 250 முதல் 270 ரன்களை அடித்துவிடுவார்.

ரோஹித்தும் பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடியவர் தான். ஆனால் சேவாக்கைவிட நல்ல பேட்டிங் டெக்னிக்கை பெற்றிருக்கிறார் ரோஹித். அதனால் சேவாக்கைவிட ரோஹித் அபாயகரமான பேட்ஸ்மேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, புனேவில் நடந்துவரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 14 ரன்களில் அவுட்டாகிவிட்டார்.