கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பாரம்பரிய எதிரி அணிகளாக திகழ்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் உலக கோப்பை தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றால் கூடுதல் பரபரப்பு இருக்கும். 

உலக கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. இதுவரை உலக கோப்பையில் ஆடிய 6 போட்டிகளிலும் இந்திய அணிதான் வென்றுள்ளது. அதனால் முதன்முறையாக இந்திய அணியை உலக கோப்பையில் வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்துவது மிகவும் கடினம்.

இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும் களத்திற்கு வெளியே நண்பர்களாக பழகுவார்கள். அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் அணியில் தனக்கு யார் நெருங்கிய நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார். 

நாளை இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியுடனான நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங், முகமது யூசுஃபுடன் 2003 உலக கோப்பையில் நடந்த சண்டை குறித்து பேசினார். மேலும் பாகிஸ்தான் வீரர்களுடனான நட்பு குறித்து பேசிய ஹர்பஜன் சிங், களத்துக்கு வெளியே பாகிஸ்தான் வீரர்களுடன் எங்களுக்கு நல்ல நட்புறவு இருந்தது. எனக்கு அக்தர் மற்றும் அஃப்ரிடி ஆகிய இருவரிடமும் நல்ல நட்பு இருந்தது. மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். நாங்கள் மூவருமே பஞ்சாபி மொழியில் பேசிக்கொள்வோம். அதனால் இசை, இலக்கியம், புத்தகம் ஆகியவற்றை பற்றி நிறைய விவாதித்திருக்கிறோம். ஆனால் எவ்வளவு நட்பாக இருந்தாலும், பவுண்டரி லைனை தாண்டி களத்துக்குள் செல்லும்போது பழக்கவழக்கத்தை பவுண்டரி லைனுக்கு வெளியே வைத்துவிட்டுத்தான் செல்வோம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.