ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ரோஹித் சர்மா எடுக்கப்படவில்லை.

ஆனால் விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல், இந்தியாவிற்கு திரும்ப இருப்பதால், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது இடத்தை ரோஹித் சர்மா தக்கவைத்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இடம்பெற்றிருப்பதால், தொடக்க வீரர்களாக யார் யார் இறங்குவார்கள், விராட் கோலியின் 4ம் பேட்டிங் ஆர்டரில் யார் இறங்குவார் என்பதெல்லாம் கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், தொடக்க ஜோடியை நான் மாற்றமாட்டேன். ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலுமே தொடக்க வீரராக இறங்க வேண்டும். கோலியின் பேட்டிங் ஆர்டரில் கேஎல் ராகுல் இறங்க வேண்டும். ராகுல் ஒரு தரமான பேட்ஸ்மேன். அவரை மாதிரியான ஒரு தரமான பேட்ஸ்மேன், எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும் சிறப்பாக ஆடுவார். ராகுலின் பேட்டிங் ஆர்டர் அவரது ஆட்டத்தில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.