உலகின் அனைத்து பவுலர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஆடிய ரிக்கி பாண்டிங்கின் மீது தான் ஆதிக்கம் செலுத்தியது எப்படி என்று ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார். 

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்த வீரர்களுக்கு இடையே, அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடியும்வரை கடும் போட்டி நிலவியுள்ளது.

சச்சின் - ஷேன் வார்ன், சச்சின் - சமிந்தா வாஸ், பிரயன் லாரா - மெக்ராத் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அவர்கள் கெரியர் முழுக்க அந்த போட்டி இருந்திருக்கிறது. இந்த வரிசையில் முக்கியமானது, ஹர்பஜன் சிங் - ரிக்கி பாண்டிங் ஜோடி.

 ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், 560 சர்வதேச போட்டிகளில் விளையாடி 70 சதங்களுடன் 27483 ரன்களை குவித்தவர் ரிக்கி பாண்டிங். அவர் ஆடிய காலத்தில் அனைத்து எதிரணிகளுக்கு எதிராகவும் மிகச்சிறப்பாகவும், அந்த அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியும் ஆடியவர் பாண்டிங். ஆனால் ஹர்பஜன் சிங்குக்கு எதிராக மட்டும் பாண்டிங் அவரது கெரியர் முழுக்க திணறியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருவரும் நேருக்கு நேர் 48 போட்டிகளில் மோதியுள்ளனர். ரிக்கி பாண்டிங்கை 12 முறை வீழ்த்தியுள்ளார் ஹர்பஜன் சிங். அதிலும் 2001ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் பாண்டிங் பேட்டிங் ஆடினார். இந்த 5 இன்னிங்ஸ்களிலுமே ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்தார் பாண்டிங். அவற்றில் மூன்று முறை டக் அவுட். 5 இன்னிங்ஸ்களில் சேர்த்தே வெறும் 17 ரன்கள் மட்டுமே பாண்டிங் எடுத்திருந்தார். இதுபோன்றதொரு மோசமான தொடரை அவரது கிரிக்கெட் வாழ்வில் அவர் சந்தித்ததே இல்லை. அந்தளவிற்கு மோசமான தொடராக பாண்டிங்கிற்கு அது அமைந்தது. 

ரிக்கி பாண்டிங் ஹர்பஜன் சிங்கிற்கு எதிராக பெரும்பாலும் அப்படித்தான் திணறியிருக்கிறார். உலகின் அனைத்து பவுலர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்திய ரிக்கி பாண்டிங்கை ஹர்பஜன் சிங் மட்டும் கட்டுக்குள் வைத்திருந்தார்.

அதற்கான காரணத்தை பிரெட் லீயுடனான உரையாடலில் தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ரிக்கி பாண்டிங் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட்டர். எதிரணிகளின் மீது அவர் எப்படி ஆதிக்கம் செலுத்தி ஆடுவார் என்பதை பார்த்திருக்கிறோம். ஒரு பவுலராக அவரது பலவீனமாக நான் பார்த்தது, அவர் தடுப்பாட்டத்தில் சிறந்தவர் அல்ல என்பதுதான். அவர் அடித்து ஆட ஏற்றவாறு பேட்டை பிடித்திருப்பார். அவர் பேட்டை பிடிக்கும் விதம் தடுப்பாட்டத்திற்கு ஏற்றதல்ல. அதனால் அவர் தடுப்பாட்டத்தில் சிறந்தவர் அல்ல. தடுப்பாட்டம் ஆட தடுமாறுவார். அவரை 11-12 முறை வீழ்த்தியிருக்கிறேன் என்ற வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அதேவேளையில், நான் எதிர்த்து ஆடியதில் சிறந்த டாப் 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்தால் அதில் பாண்டிங் கண்டிப்பாக இருப்பார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.