இந்திய அணியில் அண்மைக்காலமாக ஸ்பின் பவுலர்கள் எந்தவிதமான போட்டிகளிலும் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஓவராக கொண்டாடப்பட்ட சாஹல் - குல்தீப் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சமீபகாலமாக மரண அடி வாங்கிவருகிறது. 

இந்திய டி20 அணியில் வாஷிங்டன் சுந்தர் நிரந்தர ஸ்பின்னராக ஆடுகிறார். கூடுதலாக சாஹல் - குல்தீப் இருவரில் ஒருவர் எடுக்கப்படுகின்றனர். பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின்னர்களுக்கு டி20 அணியில் முன்னுரிமை அளிக்கப்படுவதால் வாஷிங்டன் சுந்தர் இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் பவர்ப்ளேயில் திறம்பட வீசவல்லவர் என்பதால் அவர் டி20 அணியில் கண்டிப்பாக இடம்பெறுகிறார். 

வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 23 டி20 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் அதிகமாக பவர்பிளேயில் பந்துவீசியபோதிலும், அவரது எகானமி ரேட் 7 ரன்களுக்கு கீழ்தான் இருக்கிறது. அந்தளவிற்கு, ரன்களை வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசியிருக்கிறார். 

ஆனாலும் அவரை ஹர்பஜன் சிங் தரமான ஸ்பின்னராக கருதவில்லை. உள்நாட்டு போட்டிகளில் கடந்த சில சீசன்களாக தொடர்ச்சியாக நன்றாக வீசிவரும் ஜலஜ் சக்ஸேனா மற்றும் வாகரே ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்காமல் பந்தை டர்ன் செய்யத் தெரியாதவர் எல்லாம் ஸ்பின்னராக எடுக்கப்படுகிறார் என்று தேர்வுக்குழுவை சரமாரியாக விமர்சித்தார் ஹர்பஜன் சிங். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், ஜலஜ் சக்ஸேனா(347 முதல் தர விக்கெட்டுகள் மற்றும் 6334 ரன்கள்) முதல் தர கிரிக்கெட்டில் அபாரமாக வீசியிருக்கிறார். அவர் தரமான ஸ்பின்னர் மட்டுமல்லாது நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடியவர். ஆனால் அவரையெல்லாம் கன்சிடர் கூட செய்யவில்லை. அதேபோல வாகரேவும் தொடர்ச்சியாக நன்றாக வீசிவருகிறார். அவரையும் கண்டுகொள்ளவேயில்லை. இவர்கள் உள்நாட்டு போட்டிகளில் கடந்த சில சீசன்களாக அருமையாக ஆடிவருகின்றனர். ஆனால் இவர்களை போன்ற தரமான ஸ்பின்னர்களை அணியில் எடுக்காமல், ஸ்பின் பவுலிங்கின் செயல்பாடு மோசமாக இருக்கிறது என்றால், அப்படித்தான் இருக்கும். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

இவர்கள் மாதிரியான தரமான ஸ்பின்னர்களை கண்டுகொள்வது கூட இல்லை. வாஷிங்டன் சுந்தர் என்ற பந்தை சுழற்றவே தெரியாத ஸ்பின்னரை அணியில் எடுக்கிறார்கள். நன்றாக வீசக்கூடிய தரமான ஸ்பின்னர்களை ஏன் ஊக்குவிக்கக்கூடாது? வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் ஆடுவார் என்று வாதிடுவீர்களேயானால், ஜலஜ் சக்ஸேனாவும் பேட்டிங் ஆடக்கூடியவர் தான். ஆனால் ஜலஜ் தரமான ஸ்பின்னரும் கூட. இவர் மாதிரியான பவுலர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். ஜலஜ் என்ன தவறு செய்தார் என்று எனக்கு தெரியவேண்டும் என்று ஹர்பஜன் சிங் கடுமையாக பேசியுள்ளார்.