கேரளாவை சேர்ந்த இளம் திறமையான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். 2015ம் ஆண்டே இந்திய டி20 அணியில் அறிமுகமான சாம்சன், அதன்பின்னர் இந்திய அணியில் அவ்வப்போது சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்துவருகிறார். அதற்கு காரணம், அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். ஐபிஎல் 13வது சீசனிலும் அதே தவறைத்தான் செய்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் 4ம் வரிசை வீரராக இறக்கப்பட்ட சாம்சன், மூன்றிலுமே சொதப்பினார். 23 (15), 15 (10), 10 (9) இதுதான் அவர் 3 டி20 போட்டிகளில் அடித்த ரன். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சாம்சன் சொதப்பிய நிலையில், அவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால், இந்திய அணியில் அவரது இடம் பறிபோகும் என ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், சஞ்சு சாம்சனுக்கு 4ம் வரிசையில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு இதுதான் முதல் அல்லது 2வது சுற்றுப்பயணம். எனவே அவர் இனிமேல் கற்றுக்கொள்வார். சாம்சன் மிகச்சிறந்த திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். சாம்சன் மாதிரியான வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம். அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் கற்றுக்கொள்ள முடியாது. எனவே தவறு செய்வதில் தவறில்லை. ஆனால் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அவர் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அணியில் அவரது இடம் வேறு வீரருக்கு சென்றுவிடும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.