ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததை பலர் இன்னும் ஜீரணிக்கமுடியாமல் அலைந்துகொண்டிருக்கும் நிலையில் மேட்ச் தினத்தன்று தாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் ஒழுங்காக சமைக்கப்படாத உணவைப்போட்டார்கள் என்றொரு குண்டைப்போட்டிருக்கிறார் ஹர்பஜன் சிங்.

நேற்று ஹைதராபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைத் தட்டியது. இந்நிலையில் சென்னை அணியின் ஹர்பஜன் சிங் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் முக்கியமான ட்விட் ஒன்றைப் பலரும் கவனிக்கத் தவறியுள்ளனர்.

அந்த ட்விட்டர் பதிவில் தான் தங்கியிருந்த சோழா நட்சத்திர ஹோட்டலை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார் ஹர்பஜன். அதில்,’ தங்களது சோழா ஹோட்டல்களின் அனைத்து ஊர் கிளைகளையும் விரும்பித் தங்கும் நான் ஹைதாராபாத் சோழாவை மட்டும் வெறுக்கிறேன். இங்கு அரைகுறையாக சமைக்கப்படும் உணவுகள் குறித்துப் புகார் செய்தால் மேனேஜர் முதல் ரூம் பாய்கள் வரை யாருமே கண்டுகொள்வதில்லை’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆக பஜ்ஜி சொல்வதைப் பார்த்தால் அவருக்கு வேகாத சோற்றைப் போட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சதி எதாவது இருக்குமோ?