இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் அடுத்து நடக்கவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. 

அதற்கு முன்னதாக நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடுகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் களமிறங்கினர். டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலுடன், பிரித்வி ஷா - கில் ஆகிய இருவரில் யார் தொடக்க வீரராக இறக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த பயிற்சி போட்டியில் பிரித்வி ஷாதான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். 

ஆனால் அவர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மயன்க் அகர்வாலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றினார். ரஹானே 18 ரன்னில் வெளியேறினார். புஜாராவும் ஹனுமா விஹாரியும் சேர்ந்து சிறப்பாக ஆடினர். 

Also Read - ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ஆர்சிபி.. வீடியோ

ஐந்தாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 195 ரன்களை குவித்தனர். புஜாரா 93 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஆனால் ஹனுமா விஹாரி சதமடித்து அசத்தினார். 101 ரன்களில் விஹாரி ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். இந்த பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.