கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹனுமா விஹாரி, அதன்பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பொன் வாய்ப்பாக கருதி அபாரமாக ஆடிவருகிறார். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் தனது சேர்ப்புக்கு அர்த்தம் சேர்த்த விஹாரி, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித்தை பின்னுக்குத்தள்ளி அணியில் இடம்பிடித்தார். ரோஹித்தின் புறக்கணிப்பு பல முன்னாள் ஜாம்பவான்களை அதிருப்தியடைய செய்தாலும், ஹனுமா விஹாரியின் ஆட்டம் அவரது சேர்ப்பை நியாயப்படுத்தும் விதமாகவே அமைந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அபாரமாக ஆடினார் ஹனுமா விஹாரி. ரோஹித்தை உட்காரவைத்துவிட்டு இவரை அணியில் எடுத்ததால், இவர் என்ன செய்யப்போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே இருந்தது. அதற்கேற்ப சிறப்பாக ஆடி அசத்தினார் விஹாரி. 

மொத்தமாக 2 போட்டிகளிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களிலுமே பேட்டிங் செய்த விஹாரி, ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்தார். ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அரைசதம் அடிக்க தவறினார். மற்ற எல்லா இன்னிங்ஸ்களிலும் நன்றாக ஆடினார். இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹனுமா விஹாரியிடம், அவரது முதல் இன்னிங்ஸுக்கு பிறகு, சாஸ்திரி என்ன சொன்னார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஹாரி, எனது முழங்கால்களை வளைத்து ஆடுமாறு கூறினார். அவரது அறிவுரையை பின்பற்றினேன். அது எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. அவர் சொன்னமாதிரி செய்ததால், என்னால் ஃப்ரண்ட் ஃபூட் மற்றும் பேக் ஃபூட் ஆகிய இரண்டு ஷாட்டுகளையுமே ஆடமுடிந்தது. எல்லா கிரெடிட்டும் சாஸ்திரிக்குத்தான் என்றார் விஹாரி. 

அடுத்தடுத்த போட்டிகளுக்கும் அணியில் இடத்தை உறுதி செய்வதற்கான அஸ்திவாரத்தை, ஆட்டத்தில் மட்டுமல்லாமல் சாஸ்திரிக்கு ஐஸ் வைத்தும் போட்டுவிட்டார் விஹாரி.