ஐபிஎல்15வது சீசனின் ஃபைனலில் ராஜஸ்தான் ராயல்ஸை 7  விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. 

ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், சாய் கிஷோர், முகமது ஷமி, யஷ் தயால்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்கினார். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 16 பந்தில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் 14 ரன்களுக்கு நடையை கட்டினார்.

4ம் வரிசையில் இறங்கிய தேவ்தத் படிக்கல் ரன்னே அடிக்கமுடியாமல் திணறி 10 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 10 ஓவரில் 70 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணி, அதன்பின்னர் ரன்னே அடிக்க முடியாமல் திணறியது. ஹர்திக் பாண்டியாவும் ரஷீத் கானும் சேர்ந்து மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தியதுடன் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சஞ்சு சாம்சனை ஹர்திக் பாண்டியாவும், படிக்கல்லை ரஷீத் கானும் வீழ்த்த, ரன் வேகமெடுக்காத நெருக்கடியில் அடித்து ஆடியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பட்லர், பாண்டியாவின் பந்தில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ராஜஸ்தானின் நம்பிக்கையாக திகழ்ந்த ஹெட்மயரையும் பாண்டியா வீழ்த்த, ராஜஸ்தானின் மொத்த நம்பிக்கையும் அத்துடன் முடிந்தது.

அஷ்வின் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரியான் பராக் 15 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 19வது ஓவரை யஷ் தயால் அருமையாக வீசி 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் ஷமி 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க, 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

131 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டிரெண்ட் போல்ட்டின் முதல் ஓவரில் கொடுத்த கேட்ச்சை யுஸ்வேந்திர சாஹல் தவறவிட்டார். ஆனால் 2வது ஓவரில் ரிதிமான் சஹாவின் விக்கெட்டை வீழ்த்தினார் பிரசித் கிருஷ்ணா. 23 ரன்களுக்கே குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இன்னும் 2 விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தினால் வெற்றி வாய்ப்பை வலுப்படுத்தும் வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இருந்தது. அதேவேளையில் விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை முடிந்தவரை எடுத்துச்சென்றால் எளிய இலக்கு என்பதால் அடித்துவிடலாம் என்பதை உணர்ந்து ஹர்திக் பாண்டியாவும் ஷுப்மன் கில்லும் நிதானமாக ஆடி போட்டியை எடுத்துச்சென்றனர். 2 வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால், டேவிட் மில்லர், டெவாட்டியா ஆகிய இடது கை பேட்ஸ்மேன்களுக்காக அஷ்வினை பொத்தி பொத்தி வைத்தார் சஞ்சு சாம்சன். 12 ஓவர்களுக்கு மேல் தான் அஷ்வினை எடுத்தே வந்தார். அதன்பின்னரும் அஷ்வினுக்கு பவுலிங் தொடர்ச்சியாக கொடுக்கவில்லை.

அதன்விளைவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பவுலிங் ஆப்சன் இல்லாமல் நெருக்கடி அதிகரித்தது. ஸ்கோரும் குறைவானது என்பதால் எந்தவித பதற்றமும் இல்லாமல் குஜராத் வீரர்கள் ஆடினர். பாண்டியா 34 ரன்களுக்கு சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் கில் கடைசி வரை நின்றதால், மில்லர் வந்து அடித்து ஆட, 19 ஓவரில் இலக்கை அடித்து அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை குஜராத் டைட்டன்ஸ் படைத்துள்ளது. 2008ல் ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது. அதன்பின்னர் இந்த சீசனில் அறிமுகமான குஜராத் அணி, முதல் சீசனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.