சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 22 ரன்கள் அடித்து ரெக்கார்டு பிரேக் சேஸிங் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதேவேளையில் இந்த போட்டியில் மட்டமான சாதனையை படைத்துள்ளார் சன்ரைசர்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர் மார்கோ யான்சென்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனின் மிகவும் பரபரப்பான போட்டியாக அமைந்தது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி.
மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்களை குவிக்க, 196 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் அணி, 19 ஓவரில் 174 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.
குஜராத் அணியில் ராகுல் டெவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் களத்தில் இருந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணி சார்பில் மார்கோ யான்சென் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தை சிக்ஸர் அடித்துவிட்டு, 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார் டெவாட்டியா. கடைசி 4 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரின் 3, 5 மற்றும் 6வது(கடைசி) பந்தில் 3 சிக்ஸர்கள் விளாசி குஜராத் அணியை வெற்றி பெற செய்தார் ரஷீத் கான்.
இதன்மூலம் ஐபிஎல்லில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடித்து சேஸ் செய்யப்பட்ட இலக்குகளின் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தது குஜராத் அணி. இந்த போட்டியில் கடைசி ஓவரில் 22 ரன்கள் என்ற இலக்கை எட்டி குஜராத் அணி வெற்றி பெற்றது. இதற்கு முன், 2016 ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி கடைசி ஓவரில் 23 ரன்களை அடித்ததுதான், கடைசி ஓவரில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதுதான் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 63 ரன்களை விட்டுக்கொடுத்த சன்ரைசர்ஸ் பவுலர் மார்கோ யான்சென், ரன் சேஸிங்கில் அதிக ரன்களை வாரி வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், லுங்கி இங்கிடி 2019 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸுக்கு 62 ரன்களை வாரி வழங்கியதுதான் முதலிடத்தில் இருந்தது. தென்னாப்பிரிக்க பவுலரான இங்கிடியை பின்னுக்குத்தள்ளி அந்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் மற்றொரு தென்னாப்பிரிக்க பவுலரான மார்கோ யான்சென்.
