ஐபிஎல் மெகா ஏலத்தில் விலைபோகாத சுரேஷ் ரெய்னா, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையப்போவதாக வெளியான தகவல் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் முக்கியமானவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தவர். சிஎஸ்கே அணிக்காக பல அபாரமான இன்னிங்ஸ்களை ஆடிக்கொடுத்து, அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர்.
சிஎஸ்கே அணி தடையில் இருந்த 2 சீசன்களை தவிர, 2008லிருந்து மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ரெய்னா. சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் அவரது பங்களிப்பு இருந்திருக்கிறது.
ஐபிஎல்லில் 205 போட்டிகளில் ஆடி 5528 ரன்களை குவித்துள்ளார் ரெய்னா. ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த 4வது வீரர் ரெய்னா. விராட் கோலி (6283), ரோஹித் சர்மா (5784) மற்றும் ஷிகர் தவான் (5611) ஆகிய மூவருக்கு அடுத்த 4ம் இடத்தில் ரெய்னா தான் உள்ளார். ஐபிஎல்லில் நீண்டநெடிய அனுபவம் கொண்ட சிறந்த வீரர். மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் ரெய்னா.
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல்லிலும் சரியாக ஆடுவதில்லை. அவரது உடல் எடை அதிகரித்ததுடன், முன்புபோல் ஆக்ரோஷமான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. ஐபிஎல் லெஜண்ட் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போதைய சூழலில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத அவரால் ஐபிஎல்லில் முன்புபோல் சிறப்பாக விளையாடமுடியாது என்பதால் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட ரெய்னாவை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டதையடுத்து, அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணி திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் சுரேஷ் ரெய்னாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் எடுப்பதை பற்றி பரிசீலிக்கவோ, நினைத்துக்கூட பார்க்கவோ இல்லை என்று அந்த அணி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரெய்னா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைகிறார் என்ற தகவலில் உண்மையில்லை. அதனால் ரெய்னாவை மீண்டும் ஐபிஎல் களத்தில் காணும் ரசிகர்களின் கனவு கனவாகவே போய்விட்டது.
