IPL 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 211 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி, கடைசி பந்து வரை போராடி தோல்வியடைந்தது. கே.எல். ராகுல் (92) மற்றும் டேவிட் மில்லர் (41) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் வீணானது.
DC vs GT Last over: IPL 2026 தொடரின் இதுவரை இல்லாத மிக த்ரில்லான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான அரைசதங்களால் 20 ஓவர்களில் 210 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது.
டெல்லி கேப்பிட்டல்ஸின் அதிரடி தொடக்கம்
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கம் சூப்பராக இருந்தது. பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். 9-வது ஓவரில் பதும் நிசங்கா 41 ரன்களில் அவுட் ஆனார். ஆனால், ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். 10-வது ஓவரில் நிதிஷ் ராணா அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே ரஷீத் கான், சமீர் ரிஸ்வியை டக் அவுட் ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், கே.எல். ராகுல் ஒரு முனையில் நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 52 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்தார். ஆனால், 17-வது ஓவரில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ராகுல் அவுட் ஆனதும் டெல்லி அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. ஆனாலும், டேவிட் மில்லர் 20 பந்துகளில் 41 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார். கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றும், டெல்லி அணியால் வெற்றி பெற முடியவில்லை.
கடைசி ஓவர் த்ரில்: 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை
கடைசி ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், டெல்லி 1 ரன்னில் தோற்றது.
- முதல் பந்து - பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் பந்தை விப்ரஜ் நிகம் பவுண்டரிக்கு விரட்டினார்.
- இரண்டாவது பந்து - விப்ரஜ் நிகம் தூக்கி அடித்த பந்தை, சுப்மன் கில் கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்கினார்.
- மூன்றாவது பந்து - குல்தீப் யாதவ் ஒரு ரன் எடுத்து, ஸ்டிரைக்கை டேவிட் மில்லரிடம் கொடுத்தார்.
- நான்காவது பந்து - பிரசித் கிருஷ்ணா வீசிய நான்காவது பந்தை, மில்லர் நின்ற இடத்திலிருந்தே 106 மீட்டர் தூரத்திற்கு இமாலய சிக்ஸர் அடித்தார்.
- ஐந்தாவது பந்து - 5-வது பந்தை மில்லர் அடித்தார். ஒரு ரன் ஓடக்கூடிய வாய்ப்பு இருந்தும், அவர் மறுத்துவிட்டார். இதனால், போட்டியை சமன் செய்யும் வாய்ப்பை டெல்லி இழந்தது.
- கடைசி பந்து - கடைசி பந்தை மில்லர் அடிக்கத் தவற, அது கீப்பர் ஜோஸ் பட்லர் கைக்குச் சென்றது. இருவரும் ரன் ஓட முயற்சித்தனர், ஆனால் குல்தீப் யாதவ் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் ரன் அவுட் ஆனார். இந்த பந்தை வைடு என அறிவிக்கக் கோரி மில்லர் ரிவ்யூ கேட்டார், ஆனால் அம்பயர் அதை சரியான பந்து என அறிவித்தார். இதனால், பரபரப்பான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 1 ரன்னில் தோல்வியடைந்தது.


