இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட்டில், கடைசி இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு 407 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி., அணி இந்தியாவை வீழ்த்தியிருக்கலாம். ஆனால் கடைசி நாள் ஆட்டத்தில் ஹனுமா விஹாரி மற்றும் அஷ்வினின் அபாரமான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி போட்டியை டிரா செய்தது.

அந்த போட்டியில் விக்கெட் கீப்பிங், கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே கோட்டை விட்ட ஆஸி., கேப்டன் டிம் பெய்ன், வெற்றி பறிபோய் கொண்டிருந்த விரக்தியை மட்டமான முறையில் வெளிப்படுத்தினார். ஆஸி., அணியினர் எப்போதுமே ஸ்லெட்ஜிங் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள். ஆனால் ஸ்லெட்ஜிங் என்றுகூட சொல்லமுடியாத அளவிற்கு அஷ்வினிடம் மட்டமாக நடந்த்கொண்டார் டிம் பெய்ன். அஷ்வினை ஸ்லெட்ஜ் செய்வதாக தொண தொணவென டிம் பெய்ன் பேசிக்கொண்டிருக்க, அவருக்கு தக்க பதிலடிகளை கொடுத்த அஷ்வின், ஒரு கட்டத்தில், நீ(பெய்ன்) வாயை மூடு; நான் ஆடுகிறேன் என்று சொல்லுமளவிற்கு நடந்துகொண்டார் பெய்ன்.

ஆனாலும் தொடர்ந்து அஷ்வினை டார்ச்சர் செய்த டிம் பெய்னின் செயல்பாடு, கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஒரு கேப்டனுக்கான தரம் கொஞ்சம் கூட இல்லாமல் நடந்துகொண்ட டிம் பெய்ன், ஆஸி., அணியின் கேப்டனாக இருந்த தகுதியற்றவர்; அவரை இந்த தொடருடன் கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களெல்லாம் வலுத்தன.

இந்நிலையில், டிம் பெய்ன் ஒரு கேப்டனுக்கான தரங்களுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆஸி., முன்னாள் வீரர் க்ரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து க்ரேக் சேப்பல் எழுதியுள்ள கடிதத்தில், கேப்டனாக இருந்து ஒரு நாட்டின் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய கௌரவம். அப்படி ஒரு கேப்டனாக இருப்பவர், எப்பேர்ப்பட்ட அழுத்தமான தருணத்திலும் தனது தரம் குறைந்துவிடாமல் நடந்துகொள்ள வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன் நான் அப்படி நடந்துகொள்ள தவறிவிட்டேன். அதனால் இதை மனதில் வைத்து நடந்துகொள்ளுங்கள்.

தரக்குறைவான விமர்சனங்களும் பேச்சுக்களும், எந்தவிதமான பணியிடங்களிலும் சரியான செயல்பாடு அல்ல என்பது என் கருத்து; அது மட்டமான செயல். அப்படியான செயல்பாடுகள், ஒருவரின் பலத்தை காட்டாது; அவரது பலவீனத்தைத்தான் காட்டும். எனவே ஒரு கேப்டனாக, களத்தில் தனது வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று க்ரேக் சேப்பல் அறிவுறுத்தியுள்ளார்.