இங்கிலாந்து அணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சும் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராட். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி மட்டுமல்லாது, அந்த அணியின் முக்கியமான தூண்கள் இவர்கள். 

ஆண்டர்சன் - பிராட் ஆகிய இருவரும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் ஆர்டரை சிதைத்து, நிறைய போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்தவர்கள். 

இருவருமே ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடிய திறமையான பவுலர்கள். குறிப்பாக சொந்த மண்ணில் மிகச்சிறப்பாக பந்துவீசி தொடர் வெற்றிகளை பெற முக்கிய காரணமானவர்கள். அந்தவகையில், 2012ம் ஆண்டிலிருந்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட தவறவிடாமல், தொடர்ச்சியாக அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிவந்த ஸ்டூவர்ட் பிராட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படவில்லை. அந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியும் அடைந்தது. 

இந்நிலையில், அந்த முடிவை முட்டாள்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் க்ரேம் ஸ்வான் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள க்ரேம் ஸ்வான், இங்கிலாந்து வெற்றிகரமான ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியை பிரித்தது முட்டாள்தனமான முடிவு. ஸ்டூவர்ட் பிராடை அணியில் எடுக்காததால் தான் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றோம். மார்க் உட்டும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசுகிறார்கள். ஆனால் அதற்காக ஆண்டர்சன் - பிராட் ஜோடியை பிரித்திருக்கக்கூடாது என்று ஸ்வான் தெரிவித்துள்ளார்.