கிரிக்கெட் உலகின் கடவுளாக அறியப்படுபவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன். சச்சினும் கோலியும் செய்த சாதனைகளை பற்றி இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பல அரிய கிரிக்கெட் சாதனைகளை பிராட்மேன் அப்போதே செய்துள்ளார்.

1928ம் ஆண்டிலிருந்து 1948ம் ஆண்டு வரை பிராட்மேன் கிரிக்கெட் ஆடினார். பிராட்மேன் ஆடிய காலக்கட்டத்தில் குறைந்தளவிலான போட்டிகள் தான் ஆடப்பட்டன. ஆனால் அந்த போட்டிகளிலேயே அவர் செய்த சாதனைகள் ஏராளம். 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6,996 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சராசரி 99.94. அதாவது 100க்கு 0.06 குறைவு. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 334. 

234 முதல்தர போட்டிகளில் ஆடி 28,067 ரன்களை குவித்துள்ளார் பிராட்மேன். டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களையும் முதல்தர போட்டிகளில் 117 சதங்களையும் அடித்துள்ளார். 1928 முதல் 1948 வரையிலான காலக்கட்டத்தில் 52 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் ஆடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் பிராட்மேனுக்கு பந்துவீசவே பவுலர்கள் பயந்து நடுங்கினர். அதை பவுலர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. 

பிராட்மேன் சதங்களை தொடர்ந்து குவித்து வந்தார். 50 ரன்களை கடந்துவிட்டால் அதை பெரும்பாலும் சதமாக மாற்றிவிடுவார் பிராட்மேன். அரைசதத்தை சதமாக மாற்றுவதில் பிராட்மேன் வல்லவர். 42 முறை அரைசதங்களை கடந்ததில் 29 முறை சதமடித்து, 69.05 கன்வர்சன் ரேட்டை பெற்றுள்ளார் பிராட்மேன்.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான பிராட்மேனின் சாதனைகளில் முக்கியமானது, 3 ஓவரில் சதமடித்தது. 1931ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் புளூ மௌண்டைன் நகரில் நடந்த போட்டி ஒன்றில் இந்த சாதனையை பிராட்மேன் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரும் கிரிக்கெட் உலகின் பிதாமகனுமான டான் பிராட்மேன் ஆடிய கலர் வீடியோ இதுவரை இல்லாமல் இருந்தது. கருப்பு வெள்ளை வீடியோ மட்டுமே இருந்தது. இந்நிலையில், NFSA -National Film and Sound Archive of Australia, டான் பிராட்மேனின் கலர் வீடியோவை வெளியிட்டுள்ளது. AF Kippax மற்றும் WA Oldfield ஆகிய அணிகளுக்கு இடையே சிட்னியில் 1949ம் ஆண்டு நடந்த போட்டியில் டான் பிராட்மேன் ஆடிய இன்னிங்ஸ், கவர் வீடியோவாக உள்ளது. அந்த அரிதினும் அரிதான வீடியோ இதோ.. அந்த வீடியோவை எடுத்த கேமராமேனின் பெயர் ஜார்ஜ் ஹோப்ஸ்.