வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின்  23வது இளம் வீரரான க்ளென் ஃபிலிப்ஸ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினர். கான்வே 65 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பொளந்துகட்டி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய க்ளென் ஃபிலிப்ஸ், 46 பந்தில் சதமடித்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் அடித்த அதிவேக சதம் இதுதான். இதற்கு முன் முன்ரோ 47 பந்தில் சதமடித்திருந்த நிலையில், முன்ரோவின் சாதனையை ஃபிலிப்ஸ் முறியடித்தார். 51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 108 ரன்களை ஃபிலிப்ஸ் குவித்ததன் விளைவாக 20 ஓவரில் நியூசிலாந்து அணி 238 ரன்களை குவித்தது.

239 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்கள் மட்டுமே அடித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என டி20 தொடரை நியூசிலாந்து அணி வென்றது.