T20 World Cup: சாதனை சதமடித்து தனி ஒருவனாக நியூசிலாந்தை கரைசேர்த்த க்ளென் ஃபிலிப்ஸ்! இலங்கைக்கு சவாலான இலக்கு
டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய நியூசிலாந்து அணியை, அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து தனி ஒருவனாக கரைசேர்த்தார் க்ளென் ஃபிலிப்ஸ். அவரது சதத்தால் 20 ஓவரில் 167 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி, 168 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து - இலங்கை அணிகள் ஆடிவருகின்றன. சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி வேட்கையில் களமிறங்கின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த ஃபாஸ்ட் பவுலர் பினுரா ஃபெர்னாண்டோவுக்கு பதிலாக கசுன் ரஜிதா ஆடுகிறார். நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேனுக்கு பதிலாக டேரைல் மிட்செல் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரைல் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன்(1) மற்றும் டெவான் கான்வே(1) ஆகிய இருவரையும் தலா ஒரு ரன்னுக்கு வெளியேற்றினர் இலங்கை ஸ்பின்னர்கள். ஃபின் ஆலனை மஹீஷ் தீக்ஷனாவும், கான்வேவை தனஞ்செயா டி சில்வாவும் வீழ்த்தினர்.
கேப்டன் கேன் வில்லியம்சனை 8 ரன்னுக்கு வீழ்த்தினார் கசுன் ரஜிதா. 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறிய நிலையில், 4வது விக்கெட்டுக்கு க்ளென் ஃபிலிப்ஸ் - டேரைல் மிட்செல் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். டேரைல் மிட்செல் 22 ரன்களுக்கும், ஜிம்மி நீஷம் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி சதமடித்த க்ளென் ஃபிலிப்ஸ் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை கரைசேர்த்தார். அதிரடியாக ஆடி சதமடித்த ஃபிலிப்ஸ் 64 பந்தில் 104 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். டி20 உலக கோப்பையில் பிரண்டன் மெக்கல்லமிற்கு பிறகு சதமடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் க்ளென் ஃபிலிப்ஸ்.
க்ளென் ஃபிலிப்ஸின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 167 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி 168 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.