இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 2018-2019 சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

கடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆடாத நிலையில், இந்த முறை அவர்கள் ஆடுவதால் கோலி மற்றும் ஸ்மித் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த முறை இந்திய அணியின் கேப்டனும் தலைசிறந்த வீரருமான விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடவுள்ளார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார்.

கோலி ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமான விஷயம். கோலி ஆடாதது டெஸ்ட் தொடரில் பெரும் தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். ஆனால் அதையெல்லாம் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை என்றும், அதெல்லாம் மேட்டரே இல்லை என்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கோலி ஆடாதது டெஸ்ட் தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மெக்ராத், கோலி ஆடாதது கண்டிப்பாக டெஸ்ட் தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிளாஸ் மற்றும் தரமான வீரரான கோலி 4ல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். கோலி 2 வீரர்களுக்கு நிகரானவர். அவரை ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்ஸ்மேனாகவும் இந்திய அணி பயங்கரமாக மிஸ் செய்யும். அது தொடரின் முடிவில் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.