ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் - வினிராமன் திருமணம் திடீரென ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடந்து முடிந்தது. திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங், அருமையான ஸ்பின் பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னர். 

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் க்ளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடியதையடுத்து, அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது ஆர்சிபி அணி.

மேக்ஸ்வெல் - வினி ராமன் காதல்:

சமகாலத்தின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல், தமிழத்தை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வளர்ந்த வினி ராமன் என்ற பெண்ணை காதலித்துவந்த நிலையில், இவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஸ்திரேலியாவில் ஃபார்மஸி படித்தவர் வினி ராமன். 

அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் திருமணம் தாமதமானது. அண்மையில் மேக்ஸ்வெல் - வினிராமன் திருமண அழைப்பிதழ் வெளிவந்தது. தமிழில் அச்சிடப்பட்ட அந்த திருமண அழைப்பிதழில் மார்ச் 27ம் தேதி திருமணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம்:

ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்காக ஆடுகிறார். வரும் 26ம் தேதி ஐபிஎல் தொடங்குவதால் 27ம் தேதி திருமணம் செய்ய முடியாது என்பதால் முன்கூட்டியே மேக்ஸ்வெல் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. 18ம் தேதி(நேற்று) மேக்ஸ்வெல் - வினிராமன் திருமணம் நடந்தது. 

அவர்கள் இருவரும் திருமண உடையில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வினிராமன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது. மேக்ஸ்வெல் திருமணம் திடீரென நடந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.