எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த கிரிக்கெட் அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணி, தற்போதும் டாப் அணிகளில் ஒன்றாகத்தான் உள்ளது. உலக கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறிய ஆஸ்திரேலியா, ஆஷஸ் தொடரை தக்கவைத்தது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வென்றதுடன், முதல் டெஸ்ட் போட்டியிலும் வென்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தொடக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் உள்ளார். இந்நிலையில், தேர்வாளராக முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

37 வயதே ஆன ஜார்ஜ் பெய்லி, கடைசியாக 2017ம் ஆண்டு தான் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினார். அவர்  ஆஸ்திரேலிய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளிலும் வெறும் 5டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2013-14 ஆஷஸ் தொடரில் அறிமுகமான அவரது டெஸ்ட் கெரியர் அதே தொடரில் முடிந்துவிட்டது. அந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. அந்த தொடர் முழுதும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடினாலும், ஜார்ஜ் பெய்லி என்னவோ பயங்கரமாக சொதப்பித்தான் விட்டார். அந்த 5 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். அத்துடன் அவரது டெஸ்ட் கெரியர் முடிந்தது. அதன்பின்னர் டெஸ்ட் அணியில் அவர் எடுக்கப்படவில்லை. 

திறமையான வீரரான ஜார்ஜ் பெய்லி, ஆஸ்திரேலிய அணியில் நீண்டகாலம் ஆடவில்லை. ஆனால் அவர் ஆடிய குறுகிய காலத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். தற்போது பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் ஆடிவரும் அவர், ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளராக உள்ளார் என்ற தகவல் வைரலாகிவருகிறது.