இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் சரித்தார். இங்கிலாந்து அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. இதையடுத்து 28.1 ஓவரில் வெறும் 113 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. 

114 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கெய்ல், தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 17 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், வெறும் 27 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். கெய்லின் அதிரடியால் 13வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை விளாசினார் கெய்ல். தொடர் நாயகன் விருதையும் கெய்ல் வென்றார். இந்த தொடரில் மட்டும் கெய்ல், 39 சிக்ஸர்களை விளாசி, ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னும் அந்த சாதனை அவரது பெயரில்தான் இருந்தது. 2015 உலக கோப்பை தொடரில் 26 சிக்ஸர்களை விளாசியிருந்தார். தனது சாதனையை தானே முறியடித்தார் கெய்ல்.

போட்டிக்கு பின்னர் பேசிய தொடர் நாயகன் கெய்ல், 39 வயதில் தொடர் நாயகன் விருது. இளம் வீரர்களுக்கு என்ன ஆச்சு என்று நகைச்சுவையாக கேட்டார்(கேட்டுவிட்டு சிரிக்கவும் செய்தார்). தொடர் 2-2 என சமனானது. இரு அணிகளுமே சிறப்பாக ஆடினோம். இந்த போட்டியில் எங்கள் பவுலர்கள் சிறப்பாக வீசினர். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் நல்ல வேகத்துடன் அபாரமாக வீசுகிறார். உலக கோப்பைக்கு முன் இந்த தொடரில் எங்களது ஆட்டம் எங்கள் அணி மீதான மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் உலக கோப்பைக்கு மரியாதையுடன் செல்கிறோம் என்று கெய்ல் பேசினார். 

2 உலக கோப்பைகளை அடுத்தடுத்து வென்று ஒரு காலத்தில் மிரட்டலான அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ், இந்த உலக கோப்பைக்கு நேரடியாக கூட தகுதி பெறவில்லை. தகுதிச்சுற்று போட்டிகளில் ஆடித்தான் தகுதி பெற்றுள்ளது. அது அந்த அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அடிதான் என்றாலும், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான அந்த அணி ஆடிய ஆட்டம், கெய்ல் சொன்னதை போலவே அந்த அணியின் மீது மீண்டும் மரியாதையையும் எதிரணிகளுக்கு அச்சத்தையும் கூட ஏற்படுத்தியிருக்கும்.