உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. நான்காவது அணியாக நியூசிலாந்து முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் படுமோசமாக ஆடி தொடரை விட்டு வெளியேறியுள்ளன. இந்த உலக கோப்பை நிறைய வீரர்களுக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கும். தனது கடைசி உலக கோப்பையை ஆடும் வீரர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்லும் ஒருவர். 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று அவர் ஆடியதுதான் உலக கோப்பையில் அவரது கடைசி போட்டி. இந்த போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார் கெய்ல். கெய்ல் 47 ரன்கள் அடித்திருந்தால் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்திருப்பார். 

உலக கோப்பையில் 34 போட்டிகளில் ஆடி 1225 ரன்களை குவித்திருக்கும் லாரா தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர். அவரது சாதனையை முறியடிக்க, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கெய்லுக்கு வெறும் 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அதைக்கூட அடிக்கமுடியாமல் வெறும் 7 ரன்களுக்கு அவுட்டானார் கெய்ல். கெய்ல் உலக கோப்பையில் 35 போட்டிகளில் ஆடி 1186 ரன்கள் அடித்து 40 ரன்களில் லாராவின் சாதனையை முறியடிக்க தவறிவிட்டார்.