வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டி.எல்.எஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு முன்னதாகவே ரிஷப் பண்ட் தான் நான்காம் வரிசையில் ஆடுவார் என்றும், 4 மற்றும் 5ம் பேட்டிங் வரிசைகள் நிரந்தரமானது அல்ல; சூழலுக்கு ஏற்றவாறு வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின், இரண்டாவது விக்கெட்டாக 16வது ஓவரில் ரோஹித் அவுட்டானார். எனவே இன்னும் 35 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியம். அப்படியான சூழலில், கோலி சொன்ன மாதிரி சூழலை கருத்தில் கொண்டு இறக்க வேண்டுமென்றால், ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் இறக்கியிருக்க வேண்டும். ஏனெனில் ரிஷப் பண்ட், அந்த மாதிரியான சூழலுக்கு ஏற்ப ஆடுவதற்கு இன்னும் பழகவும் இல்லை, அந்தளவிற்கு முதிர்ச்சியும் அடையவில்லை. 

அவரது இயல்பான ஆட்டம் என்பது அடித்து ஆடுவதுதானே தவிர, சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆடும் பக்குவம் இல்லை. எனவே 4ம் வரிசையில் ஐயரை இறக்கியிருக்கலாம். ரிஷப் பண்ட் 34 பந்துகள் ஆடி வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரோ, கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினார். 

இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு தற்போதைய சூழலில் என்ன தேவையோ, அணி நிர்வாகம் எதை எதிர்நோக்கியிருந்ததோ அந்த பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர். கோலியுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 68 பந்துகளில் 71 ரன்களை அடித்து அசத்தினார். 

இந்நிலையில், இந்திய அணியின் 4 மற்றும் 5 ஆகிய பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய கவாஸ்கர், என்னை பொறுத்தமட்டில், தோனியை போன்று ரிஷப் பண்ட்டும் ஒரு ஃபினிஷர். அவரை 5 அல்லது 6வது வரிசையில் இறக்கலாம். ஒருவேளை டாப் 3வீரர்கள் சிறப்பாக ஆடி, 40-45 ஓவர்கள் வரை ஆடினால், ரிஷப்பை நான்காம் வரிசையில் இறக்கலாம். அப்படியில்லாமல் 2 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்டால், நான்காம் வரிசை பேட்ஸ்மேன் 30-35 ஓவர்கள் வரை ஆட வேண்டிய கட்டாயம் இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் நான்காம் வரிசையில் இறக்க வேண்டுமே தவிர ரிஷப் பண்ட்டை இறக்கக்கூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே நீண்ட தேடுதல் படலம் நடத்தியும் நான்காம் வரிசை வீரரை உறுதி செய்ய முடியாத நிலையில், மீண்டும் இந்திய அணி நிர்வாகம், சூழலுக்கு ஏற்ப சரியான வீரரை களமிறக்குவதில் தவறு செய்துகொண்டிருப்பதை கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.