இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்தவர் தோனி. இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 

தோனி கேப்டன்சியிலிருந்து விலகி, கடந்த சில ஆண்டுகளாக கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவந்தார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, இந்திய அணியிலும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இடம்பெறவில்லை. உலக கோப்பைக்கு பின்னர் தோனி கிரிக்கெட்டே ஆடவில்லை. 

தோனி அதன்பின்னர் கிரிக்கெட் ஆடாமலும், ஓய்வும் அறிவிக்காமலும் இருந்துவருகிறார். ஆனால் அவர் இனிமேல் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினம். கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடாமல் இருந்துவரும் தோனி, பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார். 

தோனியின் மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். ரிஷப் பண்ட் இடையில் சொதப்பிய நிலையில், கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அணியில் தனது இடத்தை வலுவாக உறுதி செய்துள்ளார். 

டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவரும் நிலையில், ராகுல் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா என இளம் வீரர்களை கொண்ட துடிப்பான வலுவான அணியாக உள்ளது. டி20 உலக கோப்பைக்கான அணியில் தோனி இடம்பெறுவது மிகக்கடினம். 

ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தோனி, டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ளார். தோனி டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வலுவாக உள்ளது. 

தோனி மீண்டும் அணியில் இடம்பெறுவது குறித்து முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், தோனி டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்று உலக கோப்பையில் ஆட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும் கூட. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன். தோனிக்கு அப்பாற்பட்டு அணி நிர்வாகம் யோசிக்கிறது. தோனி தனது ஓய்வு அறிவிப்பை விளம்பரப்படுத்தமாட்டார். கமுக்கமாக ஓய்வை அறிவித்துவிடுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.