இந்திய டெஸ்ட் அணியின் பிரைம் ஸ்பின்னர் அஷ்வின். ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்ட அஷ்வின், டெஸ்ட் அணியின் பிரைம் ஸ்பின்னராக இருந்துவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அஷ்வின், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே நல்ல ரெக்கார்டை வைத்திருந்தும்கூட, அண்மையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அஷ்வின் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் உட்காரவைக்கப்பட்டார். 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஆடிவருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அஷ்வினை சேர்க்காததற்கு அணி நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அஷ்வின் வெளிநாடுகளில் இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் இல்லை எனவும் இந்தியாவில் ஆடும்போது மட்டும்தான் அவரை பிரைம் ஸ்பின்னராக கருதுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. 

அஷ்வின் ஒரு தரமான ஸ்பின்னர் என்பது அனைவரும் அறிந்ததே. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில், இந்த போட்டியில் வர்ணனை செய்துவரும் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், இந்திய அணியில் நல்ல வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்று கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், உலகின் எந்த மூலையில் ஆடினாலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் அஷ்வின். எனவே அதை உணர்ந்து அணி நிர்வாகம் அஷ்வினுக்கு ஆதரவாக இருந்து அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்க வேண்டும். 

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். ஆனால் அடுத்த போட்டியில் புவனேஷ்வர் குமார் ஓரங்கட்டப்பட்டார். அதேபோலத்தான் முரளி விஜயும். முரளி விஜய்க்கு இன்னும் வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். ஆனால் அவரையும் ஓரங்கட்டிவிட்டனர். வீரர்களின் தன்னம்பிக்கை தளரும் வகையில் அணி தேர்வு இருக்கக்கூடாது என்று கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.