உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இறுதி போட்டி நடக்கவுள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் களத்தில் நின்ற நிலையில், ஐந்தாம் வரிசையில் அனுபவ வீரர் தோனியை அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பியது மிகப்பெரிய தவறு. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகாவது தோனி அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்கு பிறகும் பாண்டியா தான் அனுப்பப்பட்டார். ரிஷப் - பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு போயி ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட்ட தவறான ஷாட் ஆட அனுமதிக்காமல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதங்கம். 

இதுகுறித்த அதிருப்தியையும் ஆதங்கத்தையும் கேள்விகளையும் பல முன்னாள் ஜாம்பவான்கள் முன்வைத்து வருகின்றனர். தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்காதது, அம்பாதி ராயுடுவை புறக்கணித்தது, மயன்க் அகர்வாலை அணியில் எடுத்தது என அதிரடியான கேள்விகளை முன்வைத்து மக்களுக்கு பதிலளிக்குமாறு இந்திய அணி நிர்வாகத்தை கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய கங்குலி, 24 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அந்த நெருக்கடியான சூழலில் ரிஷப் பண்ட் களத்தில் நின்ற நேரத்தில் தோனியை இறக்கியிருக்க வேண்டும். பவுலிங்கிற்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகிக்கொண்டிருந்த நிலையில், ரிஷப்புடன் ஜோடி சேர பாண்டியாவை அனுப்பி வைத்தீர்கள். நெருக்கடியான சூழலில் இரு அதிரடி வீரர்களை இறக்குவது எந்த வகையில் நியாயம்..? இருவருமே இளம் வீரர்கள் மட்டுமல்லாது அடித்து ஆடக்கூடியவர்கள். ஆனால் அந்த சூழலில் பார்ட்னர்ஷிப் தான் முக்கியம். எனவே தோனியை அனுப்பியிருந்தால் அவர் ரிஷப் பண்ட்டை சரியாக வழிநடத்தி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். 

கடந்த 2 ஆண்டுகளாக உங்கள் இஷ்டத்துக்கு பல முடிவுகளை எடுத்துள்ளீர்கள். ராயுடுவை முதலில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் எடுக்கவில்லை. சரி இருக்கட்டும். ஆனால் விஜய் சங்கர் காயத்தால் விலகிய பிறகு அவருக்கு பதிலாக ராயுடுவை எடுக்காமல், இதுவரை ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஆடாத மயன்க் அகர்வாலை திடீரென அணியில் எடுக்கிறீர்கள். அவரது முதல் போட்டியிலேயே அரையிறுதி அல்லது இறுதி போட்டியில் இறக்கலாம் என்று நினைத்தீர்களா..? ராயுடுவை ஏன் எடுக்கவில்லை..?

நான்காம் வரிசைக்கான வீரரை கண்டுபிடித்துவிட்டோம் என்று ராயுடுவை சொன்னீர்கள். அப்படியிருக்கையில், அந்த நம்பர் 4 வீரருக்கு என்ன ஆச்சு..? அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று விளக்கமளிக்க வேண்டும். இதெல்லாம் அணி தேர்வுக்குழுவின் முடிவாக இருக்காது. அணி நிர்வாகத்தின் முடிவாகத்தான் இருக்கும். நீங்கள்(அணி நிர்வாகம்) செய்ததெல்லாம் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை.ஆனால் அவையெதுவுமே ஒர்க்கவுட் ஆகவில்லை. எனவே இந்த முடிவுகள் குறித்தெல்லாம் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.