ஐபிஎல் 12வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இந்த சீசனின் இறுதி போட்டியில் மோதின.

சிஎஸ்கேவை கடைசி பந்தில் வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளிலுமே சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இந்த சீசனில் ரசல், பாண்டியாவின் அதிரடியான ஃபினிஷிங் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் சாஹர் ஆகிய இளம் வீரர்களின் ஸ்பின் பவுலிங் என அருமையாக இருந்தது இந்த சீசன். ராகுல் சாஹர், ஷ்ரேயாஸ் கோபால் என்ற இரண்டு அருமையான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தங்களது திறமையை உலகிற்கு காட்டியுள்ளனர். 

இந்த சீசன் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், இந்த சீசன் தான் ஐபிஎல்லின் சிறந்த சீசன். நிறைய போட்டிகள் கடைசி ஓவரில் த்ரில்லாக முடிந்தன. மேலும் பல போட்டிகள் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் முடிந்தன. இறுதி போட்டியும் கடைசி பந்து வரை சென்றது. ஒரு மிகச்சிறந்த இறுதிப்போட்டியாக இது அமைந்தது. வழக்கமாக கடந்த காலத்தில் நடந்ததை விட அண்மையில் நடந்ததைத்தான் ஞாபகம் வைத்திருப்போம். ஆனால் உண்மையாகவே இதுதான் சிறந்த சீசன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.