இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின், இரண்டாவது விக்கெட்டாக 16வது ஓவரில் ரோஹித் அவுட்டானார். அதன்பின்னர் நான்காம் வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட் சரியாக ஆடவில்லை. 34 பந்துகளில் வெறும் 20 ரன்கள் அடித்து ஏமாற்றினார். 

ரிஷப்பின் விக்கெட்டுக்கு பிறகு ஐந்தாவது வீரராக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். மிடில் ஆர்டர் வீரர் செய்ய வேண்டிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ். களத்திற்கு வந்தது முதலே கவனமாகவும் அதேநேரத்தில் பந்துகளை வீணடிக்காமல் அடித்தும் ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை குவித்தனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒரு அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செவ்வனே செய்து அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 68 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் தனது சேர்க்கையை, சிறப்பான பேட்டிங்கின் மூலம் நியாயப்படுத்தினார் ஷ்ரேயாஸ் ஐயர். 

இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசிய கவாஸ்கர், ஷ்ரேயாஸ் ஐயர் அவருக்கான வாய்ப்பை பெற்றுவிட்டார். ஐந்தாம் வரிசையில் அவர் இறங்கியபோது ஆடுவதற்கு நிறைய ஓவர்கள் இருந்தன. கேப்டன் கோலிக்கு நன்றாக கம்பெனி கொடுத்து ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களிடமிருந்து தான் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில், பவுலிங் முனைதான் கிரிக்கெட்டை கற்றுக்கொள்வதற்கான சரியான இடம். அதை சரியாக பயன்படுத்தினார் ஷ்ரேயாஸ். விராட் கோலி ஆடும்போது மறுமுனையிலிருந்து அதைத்தான் ஷ்ரேயாஸ் ஐயர் செய்தார் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.