இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் அவர் இந்தியா திரும்புகிறார். 

அதனால் அவர் ஆடாத கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தான் கேப்டனாக செயல்படவுள்ளார்.இந்நிலையில், ரஹானேவின் கேப்டன்சி மற்றும் அவருக்கு கேப்டன்சி பொறுப்பு அழுத்தமாக இருக்குமா என்றெல்லாம் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ரஹானேவுக்கு கேப்டன்சி பொறுப்பு, உண்மையாகவே அழுத்தமாக இருக்காது. ஏனெனில் ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி இதுவரை ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி, தர்மசாலாவில் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆகிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.

எனவே கேப்டன்சியை பொறுத்தமட்டில் அது ரஹானேவுக்கு அழுத்தமே கிடையாது. அவர் தற்காலிக கேப்டன் தான் என்ற தெளிவு அவரிடம் இருக்கும். எனவே அவர் களத்தில் பொதுவாக எவ்வளவு நேர்மையாக ஆடுவாரோ, அதே நேர்மையுடன் கேப்டன்சி பொறுப்பையும் செய்துவிடுவார். பேட்டிங்கிலும் களத்திற்கு சென்று, புஜாராவுடன் இணைந்து ஆஸ்திரேலிய அணியை பங்கம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஆடுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.