ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்திய டெல்லி கேபிடள்ஸ் அணி, விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது. இளமைக்கும் அனுபவத்துக்கும் இடையேயான இந்த போட்டி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என இளம் வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும் பாண்டிங் - கங்குலி என்ற இருபெரும் ஜாம்பவான்களின் வழிகாட்டுதலுடன் இந்த சீசனில் சிறப்பாக ஆடினர். ரிஷப் பண்ட் செம ஃபார்மில் அதிரடியாக ஆடிவருகிறார். பிரித்வி ஷாவும் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாகவே சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். 

இளம் துடிப்பான டெல்லிக்கும் அனுபவம் வாய்ந்த சிஎஸ்கேவிற்கும் இடையேயான போட்டியை காண ஆவலாக உள்ளதாக டிவில்லியர்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லி அணியின் இளம் திறமைகள் பேட்டிங் ஆடுவதை காண அருமையாக இருப்பதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், டெல்லி அணியின் இளம் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை பார்க்கவே ஆசையாக உள்ளது. கொஞ்சம் கூட பயமே இல்லாமல் வியப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில ஷாட்டுகளை ஆடுகின்றனர் என்று டெல்லி அணியின் பேட்டிங்கை கவாஸ்கர் புகழ்ந்தார்.