ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஓராண்டாக தொடர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், உலக கோப்பைக்கு முந்தைய இந்த தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. ஆனால் இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ஸ்மித் மற்றும் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஃபின்ச் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக இருக்கும் ஃபின்ச், சரியாக ஆடுவதில்லை. ஃபின்ச்சின் கேப்டன்சி சிறப்பாக இருந்தாலும் ஒரு வீரராக அவர் சோபிப்பதில்லை. இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே பெரும்பாலும் அவுட்டாகிவிடுகிறார். 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்களாக இருந்த அனைவருமே சிறந்த வீரர்கள். ஒவ்வொரு போட்டியிலும் அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர்களாக இருந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றுபவர்களாக இருந்தவர்கள்.

ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஜார்ஜ் பெய்லி, ஸ்டீவ் ஸ்மித் என அனைவருமே சிறந்த வீரர்கள். அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் ஃபின்ச், தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புகிறார்.

கேப்டன் என்பவர் மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கேப்டன் சிறப்பாக ஆடினால்தான் மற்ற வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும். அதுமட்டுமல்லாமல் கேப்டன் சிறப்பாக ஆடினால்தான் வீரர்களிடம் கெத்தாக வேலை வாங்க முடியும். கேப்டனே சரியாக ஆடாவிட்டால், வீரர்களுக்கு கேப்டன் மீதான மதிப்பீடு குறையவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் நீயே சரியா ஆடல, எங்களை நீ என்ன சொல்றது? என்ற மனப்போக்கு வீரர்களிடம் உருவாவதற்கான வாய்ப்பும் உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் போட்டியில் ஃபின்ச் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ச்சியாக ஃபின்ச் இதுபோன்றுதான் அவுட்டாகிவருகிறார். அந்த வகையில், போட்டிக்கு பிறகு வர்ணனையாளர்கள் கவாஸ்கர் மற்றும் ஹைடன் கலந்துகொண்ட உரையாடலில், கவாஸ்கர் இந்த பிரச்னை குறித்து பேசினார். 

அப்போது, எல்லா காலக்கட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர் தான் அந்த அணியின் கேப்டனாக இருந்துள்ளார். ஆனால் தற்போதைய கேப்டன் ஃபின்ச், சிறப்பாக ஆடுவதில்லை. அணி வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் கேப்டன், சிறப்பாக ஆடினால்தான் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும். ஃபின்ச்சே சரியாக ஆடவில்லை என்றால் அது கஷ்டம் என்ற நடைமுறை சிக்கலை வெளிப்படையாக பேசிய கவாஸ்கர், இதற்கு முந்தைய ஆஸ்திரேலிய கேப்டன்கள் போல ஃபின்ச் இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். 

அவர் சொல்வதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த ஹைடனால் எதுவும் பேச முடியவில்லை. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த பேபி சிட்டிங் புரோமோ வீடியோவை பார்த்து கடுப்பான ஹைடன், ஆஸ்திரேலிய அணியின் செயல்பாட்டால் இந்நேரம் மன உளைச்சலில் இருப்பார். 

அதன் எதிரொலியாகத்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கூட அவர்களை சந்தித்து பேசினார். அப்போது எப்படி ஆட வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கியிருப்பார்.