சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கவாஸ்கர், 1970-80களில் தலைசிறந்து விளங்கியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் கவாஸ்கர் தான். 

ஆல்டைம் லெஜண்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கவாஸ்கர், தன் கெரியரில் மட்டுமல்லாது தனது வாழ்வில் ஏராளமான பேட்ஸ்மேன்களை பார்த்துள்ளார். அவரே சிறந்த பேட்ஸ்மேன் என்பதால், சிறந்த பேட்ஸ்மேன்களை அடையாளம் காண்பது அவருக்கு எளிது. அதுமட்டுமல்லாது, பல தலைமுறை கிரிக்கெட்டை பார்த்துவரும் அவரால், ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்பதை சரியாக கூறமுடியும். அந்தவகையில், சச்சின் டெண்டுல்கர் தான் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இந்தியா டுடேவிடம் பேசிய கவாஸ்கர், என்னை பொறுத்தமட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தான். அவரை மாதிரியான பேட்ஸ்மேனை நான் இதுவரை பார்த்ததேயில்லை. நான் வளர்ந்த காலத்தில் நிறைய பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறேன்.. நான் ஆடிய காலத்தில் என்னுடைய சமகால வீரர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.. இப்போதைய பேட்ஸ்மேன்கள் வரை ஏராளமான பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறேன். அப்படி நான் பார்த்தவரையில், சச்சின் டெண்டுல்கர் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். வேறு யாரும் பேட்டிங்கில் அவரது பக்கத்தில் கூட வரமுடியாது. 

பேட்டிங் ஆடும்போது அவரது தலை, பேலன்ஸ் மற்றும் நகர்வுகள் என அனைத்துமே அபாரமாக இருக்கும். ஃப்ரண்ட்ஃபூட் ஷாட்டுகளை ஆடும்போதும் சரி, பேக்ஃபூட் ஷாட்டுகளை ஆடும்போதும் சரி, அருமையாக பேலன்ஸ் செய்து ஆடுவார்.  ஆஃப் திசை, லெக் திசைகளிலும் சிறப்பாக ஆடக்கூடிய சச்சின், டி20 கிரிக்கெட் வந்தபிறகு, ஸ்கூப் மற்றும் புல் ஷாட்டுகளையும் அபாரமாக ஆடினார். அனைத்து விதமான ஷாட்டுகளையும் திறம்பட தெளிவாக ஆடக்கூடியவர் சச்சின். அவர் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்று கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தனது 16 வயதில் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 2013ம் ஆண்டு வரை இந்திய அணியில் 24 ஆண்டுகாலம் ஆடி, 100 சர்வதேச சதங்களுடன், 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய சாதனையாளர்.