இந்திய அணியில் தோனியின் காலம் முடிந்துவிட்ட நிலையில், மூன்றுவிதமான போட்டிகளுக்குமான அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை கொடுத்து தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

உலக கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் என ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது கெரியரின் தொடக்க காலம் இது என்பதால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவர் தொடர்ச்சியாக சொதப்பிவரும் அதேவேளையில், சஞ்சு சாம்சனும் இஷான் கிஷானும் உள்நாட்டு போட்டிகள் மற்றும் இந்தியா ஏ அணியில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருவதால் ரிஷப் பண்ட் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அனைத்து போட்டிகளிலுமே 4ம் வரிசையில் இறக்கப்பட்ட ரிஷப் பண்ட், நெருக்கடியான மற்றும் எளிதான என எந்த சூழலிலுமே நன்றாக ஆடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் நான்காம் வரிசையில் இறங்கினார். ஆனால் இரண்டிலுமே சரியாக ஆடவில்லை. ரிஷப் பண்ட் 8 டி20 போட்டிகளில் பேட்டிங் ஆடி வெறும் 12 சராசரியுடன் 96 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

சூழலை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப ரிஷப் பண்ட்டால் இன்னிங்ஸை பில்ட் செய்ய முடியவில்லை. ரிஷப் பண்ட் தவறான ஷாட் செலக்‌ஷனால் களத்திற்கு வந்தவுடனேயே பெவிலியனுக்கு திரும்பிவிடுகிறார். ரிஷப் பண்ட்டின் தவறான ஷாட் செலக்‌ஷன், அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது என்றும், இனிமேல் தவறான ஷாட் செலக்‌ஷன் செய்தால், முட்டிக்கு முட்டி தட்டிவிடுவேன் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட்டை எச்சரித்திருந்தார். பயமற்ற ஆட்டத்துக்கும் பொறுப்பற்ற ஆட்டத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் சாடியிருந்தார். 

இளம் வீரர் ஒருவரை அவருக்கான வாய்ப்புகளையும் நம்பிக்கையையும் கொடுத்து ஊக்கப்படுத்தாமல், மோசமாக கையாண்ட விதத்திற்காக அணி நிர்வாகத்தை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விளாசியிருந்தார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்காமல் ஐந்து அல்லது ஆறாம் வரிசையில் இறக்கிவிட்டால், அது அவரது இயல்பான ஆட்டத்தை ஆட ஏதுவாக அமையும் என்று கவாஸ்கரும் லட்சுமணனும் ஒரேமாதிரியாக கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ரிஷப் பண்ட்டை ஐந்தாம் வரிசையில் இறக்கலாம். அவர் பொதுவாக ஆக்ரோஷமாக அடித்து ஆடக்கூடியவர். எனவே ஐந்தாம் வரிசையில் இறக்குவது, அவரது இயல்பான ஆட்டத்தை ஆட உதவும். நின்று நிதானமாக இன்னிங்ஸை பில்ட் செய்வதெல்லாம் ரிஷப் பண்ட்டுக்கு ஆகாத காரியம். அதைவிட களத்திற்கு வந்ததுமே அடித்து ஆடுவதுதான் அவரது இயல்பு. எனவே அவரை கொஞ்சம் பின்வரிசையில் இறக்குவதன்மூலம் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

ரிஷப் பண்ட் குறித்து பேசிய விவிஎஸ் லட்சுமணன், இயல்பாகவே ஆக்ரோஷமாக ஆடுவதுதான் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் ஸ்டைல். துரதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்ட்டால் சர்வதேச போட்டிகளில் நான்காம் வரிசையில் சோபிக்க முடியவில்லை. எனவே அவரை ஐந்து அல்லது ஆறாம் வரிசையில் இறக்கினால், அது அவரது இயல்பான ஆட்டத்தை ஆடுவதற்கான லைசென்ஸாக அமையும். நான்காம் வரிசையில் ஆடி ஸ்கோர் செய்யும் முறை ரிஷப் பண்ட்டுக்கு தெரியவில்லை. எனவே அவரை பின்வரிசையில் இறக்க வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்துள்ளார்.