உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு அணி நிர்வாகத்திற்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அணியை மறு ஆய்வு செய்வதற்கான நிர்வாகக்குழு தலைமையிலான கூட்டமும் நடைபெறவுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் தோல்விக்கு பிறகு பல தகவல்கள் வெளிவந்தன. கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மற்ற சீனியர் வீரர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதால் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் வீரர்கள், ரோஹித் தலைமையில் தனி கேங்காக செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. கேப்டன் கோலி தனது பேச்சை கேட்டு நடக்கக்கூடிய தனது விசுவாசிகளுக்கு அணியில் முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அணியின் சீனியர் வீரர் மற்றும் துணை கேப்டன் என்ற முறையில் ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை கேப்டன் கோலியும் பயிற்சியாளர் சாஸ்திரியும் எடுப்பதில்லை என்ற தகவல் வெளிவந்தது. அணி தேர்வு விஷயத்தில் ரோஹித் சர்மாவின் பரிந்துரை பரிசீலிக்கப்படுவதே இல்லை என்றும் கோலியும் சாஸ்திரியும் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது அதிருப்தியில் இருக்கும் வீரர்கள் ரோஹித்துக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதனால் கோலி மற்றும் ரோஹித் இடையேயான பனிப்போரின் காரணமாக அணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய எம்பி-யுமான கவுதம் கம்பீர், கோலி - ரோஹித் இடையே மோதல் இருப்பதாக செய்தி படித்தேன். இதுகுறித்து பிசிசிஐ விசாரித்து உடனடியாக அதை மக்களிடத்தில் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற கருத்துகள் தொடர்ந்து பரவிக்கொண்ட்டே இருக்கும். எனவே ஊகங்களுக்கு வாய்ப்பளிக்காமல் பிசிசிஐ உடனடியாக செயல்பட்டு தெளிவுபடுத்த வேண்டும். 

இந்திய அணியின் ஓய்வறையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே முதிர்ச்சியானவர்கள். எனவே ரோஹித் - கோலி இடையே பிளவு என்ற தகவலில் உண்மை என்றே நினைக்கிறேன் என கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.