தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி.
அதைத்தொடர்ந்து ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் இதுவரை தோல்வியே அடைந்திராத இந்திய அணி, முதல் முறையாக தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.
இந்த டெஸ்ட்டில் இந்திய அணி பேட்டிங்,பவுலிங் என இரண்டிலுமே அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. பவுலிங்கில் ஷர்துல் தாகூர் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார். இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவருமே எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில் பந்துவீசும்போது காயமடைந்ததால் அவரால் முழு திறனுடன் பந்துவீச முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் ஒருசில ஓவர்களே வீசினார்.
ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், இந்திய அணி 4வது ஃபாஸ்ட் பவுலரை வெகுவாக மிஸ் செய்தது. முகமது சிராஜ் முழு ஃபிட்னெஸுடன் இருந்திருந்தால் கேப்டனுக்கு பவுலர்களை மாற்றுவது ஈசியாக இருந்திருக்கும். மைதானம் ஈரமாக இருந்ததால் பந்து ஈரமானது. எனவே ஸ்பின்னரான அஷ்வினால் கண்டிப்பாக சிறப்பாக பந்துவீசமுடியாது. எனவே சிராஜ் ஃபிட்னெஸுடன் இருந்திருந்தால் 4 ஃபாஸ்ட் பவுலர்களை பயன்படுத்துவது எளிதாக இருந்திருக்கும். வெறும் 3 பவுலர்களை மட்டும் வைத்துக்கொண்டு 8 விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமான காரியம்.
தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்கள் மார்கோ ஜான்சென் மற்றும் ரபாடா ஆகியோர் நல்ல உயரமானவர்கள். எனவே அவர்களது இயல்பான லெந்த்தே ஷார்ட் பிட்ச் பந்துகள் தான். அதனால் அவர்கள் இயல்பாகவே நல்ல பவுன்ஸர்கள் வீசினார்கள். இந்திய பவுலர்களான பும்ரா, ஷமி ஆகியோர் அவ்வளவு உயரமானவர்கள் அல்ல. அவர்களது இயல்பான பவுலிங் லெந்த், ஃபுல் லெந்த் தான். ஆனால் இந்திய பவுலர்கள், தென்னாப்பிரிக்க பவுலர்களை போல பவுன்ஸர்கள் வீச முயற்சித்ததால் அதிகமான ரன்கள் தான் போனதே தவிர, அவை பலனளிக்கவில்லை.
ஆனால் இதையெல்லாம் விட பெரிய பிரச்னை பேட்டிங் தான். டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடி, வெறும் 200 ரன்களுக்கு சுருண்டால் ரொம்ப கஷ்டம். கேஎல் ராகுல் அதை மிகச்சரியாக சுட்டிக்காட்டி பேசினார். செஞ்சூரியன் மற்றும் ஜோஹன்னஸ்பர்க் ஆகிய 2 டெஸ்ட்டுகளின் முக்கியமான வித்தியாசமே இதுதான். செஞ்சூரியனில் முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் குவித்தது இந்திய அணி; அந்த போட்டியில் ஜெயித்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் 200 ரன்களுக்கு சுருண்டது. ஒவ்வொரு முறையும் 200-220 ரன்கள் டார்கெட் மட்டுமே நிர்ணயித்து, பவுலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது என்றார் கம்பீர்.
