சமகால கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸுக்கு நிகரான சிறந்த ஆல்ரவுண்டர் உலகிலேயே இல்லை என கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். 

இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துவருகிறார்.

பென் ஸ்டோக்ஸ் உலகின் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இப்போதே இடம்பிடித்துவிட்டார். அவரது கெரியர் முடிவதற்குள் மிகச்சிறந்த லெஜண்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்துவிடுவார். கேரி சோபர்ஸ், இயன் போத்தம், கபில் தேவ், இம்ரான் கான், ஜாக் காலிஸ் ஆகியோரை போல சிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

2019 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதில் முக்கியமான பங்கு ஸ்டோக்ஸைத்தான் சேரும். இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி வரை போராடி இங்கிலாந்து அணியை தோல்வியிலிருந்து மீட்டு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதேபோல, கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரிலும் ஒரு போட்டியில், கடைசி விக்கெட்டுக்கு, சுமார் 80 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பேட்ஸ்மேனை ஒருமுனையில் நிறுத்திவிட்டு, மறுமுனையில் அனைத்து ரன்களையும் தனிஒருவனாக அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தவர் பென் ஸ்டோக்ஸ். அதேபோல வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 2 இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட்டிங் செய்ததால் தான் இங்கிலாந்து வென்றது. 

இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னராகவும் தலைசிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழும் பென் ஸ்டோக்ஸை, ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் கம்பீர் வெகுவாக புகழ்ந்துள்ளார். 

ஸ்டோக்ஸ் குறித்து பேசிய கம்பீர், பென் ஸ்டோக்ஸுடன் வேறு எந்த வீரரையும் ஒப்பிடவே முடியாது. பென் ஸ்டோக்ஸ் தற்போது இருக்கும் ஃபார்மின் அடிப்படையில், அவரை மாதிரியான ஒரு sஆல்ரவுண்டர் இந்தியாவில் மட்டுமல்ல; உலகிலேயே கிடையாது. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக ஆடிவருகிறார். அவருக்கு நிகரான ஆல்ரவுண்டரே இப்போது வேறு எந்த அணியிலும் கிடையாது என்று கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.