இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் கவுதம் கம்பீர். அதிரடியான மற்றும் அருமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சாதனைகளை குவித்த வீரர்கள் கூட, ஐசிசி உலக கோப்பை தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகி திணறியிருக்கிறார்கள். 

ஆனால் கம்பீர் அவர்களுக்கு நேர்மாறானவர். உலக கோப்பை தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில், நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக ஆடியவர். 2007 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 75 ரன்களை குவித்த கம்பீர், 2011 ஒருநாள் உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில், இந்திய அணி 275 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, 97 ரன்களை குவித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர். 

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4154 ரன்களையும் 147 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5238 ரன்களையும் 37 டி20 போட்டிகளில் ஆடி 932 ரன்களையும் குவித்துள்ளார். 

ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு 2 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்து ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் எப்போதுமே கூடுதல் ஆக்ரோஷத்துடன் ஆடும் கம்பீர், பாகிஸ்தான் வீரர்கள் அஃப்ரிடி மற்றும் காம்ரான் அக்மலுடன் களத்தில் மோதிய சம்பவங்கள், ஆல்டைம் கள மோதல்களில் இடம்பெற்றுள்ளன. அந்தளவிற்கு பாகிஸ்தானுக்கு எதிராக மிக ஆக்ரோஷமாக ஆடுவார். 

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் விவிஎஸ் லட்சுமணன் உடனான உரையாடலில், பாகிஸ்தான் அணியின் எந்த பவுலர் எதிர்கொள்ள மிகவும் கடினமானவர் என்பது குறித்து கம்பீர் பேசியுள்ளார். 

அதுகுறித்து கருத்து தெரிவித்த கம்பீர், பாகிஸ்தான் அணியின் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மலுக்கு எதிராக பேட்டிங் ஆட எனக்கு பிடிக்கும். நான் எதிர்கொண்டு ஆடிய சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களில் சயீத் அஜ்மலும் ஒருவர். குறிப்பாக இரவில், லைட் வெளிச்சத்தில் அவரது தூஸ்ராக்களை எதிர்கொள்வது மிகவும் கடினம். நல்ல வேகமாகவும் வீசுவார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

சயீத் அஜ்மல் பாகிஸ்தான் அணிக்காக 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 178 விக்கெட்டுகளையும் 113 ஒருநாள் போட்டிகளில் ஆடி 184 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2008 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணியில் ஆடிய வலது கை ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல்.