Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ நீ இதை பண்ணாத வரை எவ்வளவு ரன் அடிச்சும் யூஸ் இல்லப்பா தம்பி..! சூர்யகுமாரை கடுமையாக விளாசிய கம்பீர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தாலும், அவர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.
 

gautam gambhir disappointed with suryakumar yadav for not finishing off the matches for the team
Author
Chennai, First Published Nov 19, 2021, 6:17 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்று ராஞ்சியில் நடக்கும் 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணி ஆடவுள்ளது.

ஜெய்ப்பூரில் நடந்த முதல் டி20 போட்டியில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியில் இந்திய அணி முதல் வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் (48) சிறப்பான பேட்டிங் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் எளிதாக வெற்றி பெறும் சூழல் இருந்தது.

ஆனால் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 62 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 8 பந்தில் 5 ரன் அடித்து ஆட்டமிழக்க, இந்திய அணி மீதான அழுத்தம் அதிகரித்தது. ஒருவழியாக கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து போட்டியை முடித்துவைத்தார்.

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். செட்டில் பேட்ஸ்மேனான அவர் ஆட்டமிழந்தபின்னர் இந்திய அணி தட்டுத்தடுமாறி கடைசியில் ஜெயித்தது.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்தாலும், கடைசி வரை களத்தில் நின்று பொறுப்புடன் போட்டியை முடித்து கொடுக்காதது கௌதம் கம்பீரை அதிருப்தியடைய செய்துள்ளது.

அதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர்,  சூர்யகுமார் யாதவ் போட்டியை முடித்து கொடுக்காதது எனக்கு கடும் அதிருப்தி. அவரது பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் போட்டியை முடித்து கொடுக்கவில்லை என்றால் பிரயோஜனமில்லை. எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல; எப்படி முடிக்கிறோம் என்பது தான் முக்கியம். 60, 70, 80 ரன்கள் அடிப்பதெல்லாம் முக்கியமே இல்லை. கடைசி ரன்னை அடித்து அணிக்காக போட்டியை முடித்து கொடுப்பதுதான் முக்கியம்.

ரிஷப் பண்ட் போட்டியை முடித்து கொடுத்தார். ரிஷப் அடித்த கடைசி ரன் தான், சூர்யகுமார் அடித்த 62ரன்களை விட முக்கியமான ரன்; கடினமான ரன். எனவே 70-80 ரன்கள் அடித்தாலும், கடைசி ரன்னை அடித்து அணியை ஜெயிக்கவைப்பது தான் முதிர்ச்சி என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios