தோனிக்கும் கம்பீருக்கும் இடையே மோதல் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் நிலையில், அதுதொடர்பாக மனம் திறந்துள்ளார் கௌதம் கம்பீர்.
தோனி:
தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் முக்கியமானவர். கபில் தேவுக்கு அடுத்து இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பையை வென்று கொடுத்தவர். ஒருநாள் உலக கோப்பை(2011), டி20 உலக கோப்பை(2007), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.
தோனியின் கேப்டன்சி திறன் அனைவரும் அறிந்ததே. தோனி மீது பொதுவெளியில் எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் பாராட்டுபவர்கள் தான் அதிகம். அவரது சில முடிவுகள் சர்ச்சையானதாக இருந்தாலும் அவரை யாரும் விமர்சிப்பதில்லை. அதற்கு காரணம், போட்டிகளில் அவர் பெற்றுக்கொடுத்த முடிவுகள் தான்.
தோனி - கம்பீர்:
ஆனால் தோனியுடனான கருத்து முரண்களையும், அவர் மீதான விமர்சனங்களையும் முன்வைப்பவர் கௌதம் கம்பீர் தான். தோனியின் வலிமை, திறமை, கேப்டன்சி திறன் ஆகியவற்றை புகழ்ந்து பேசுவதுடன், அவர் மீதான விமர்சனங்களையும் முன்வைப்பவர் கம்பீர்.
அதனாலேயே கம்பீருக்கும் தோனிக்கும் இடையே மோதல், அவர்கள் இருவருக்கும் ஒத்துப்போகாது என்று பொதுவெளியில் பேசப்பட்டுவருகிறது.
கம்பீர் விளக்கம்:
இந்நிலையில், அதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ள கௌதம் கம்பீர், தோனி மீது எனக்கு பரஸ்பர மரியாதை உள்ளது. அது எப்போதுமே இருக்கும். தோனிக்கு தேவைப்படும்போது நான் அவர் பின்னால் நிற்பேன். அப்படி ஒரு சூழல் இல்லை. ஒருவேளை அப்படி தேவைப்பாட்டால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக அளித்த பங்களிப்பிற்காக அவருக்காக நான் நிற்பேன்.
கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அவர் கேப்டனாக இருந்தபோது நீண்டகாலம் நான் தான் துணை கேப்டனாக இருந்திருக்கிறேன். அவருக்கென்று சில கருத்துகள் இருக்கும். எனக்கும் என்னுடைய கருத்துகள் இருக்கும். ஆட்டத்தை அவர் பார்க்கும் விதமும், நான் பார்க்கும் விதமும் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அதற்காக சண்டை என்றெல்லாம் இல்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றார் கம்பீர்.
