இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசை பேட்ஸ்மேனை இரண்டு ஆண்டுகளாக தேடியும் உலக கோப்பைக்கு முன் சரியான வீரரை இந்திய அணி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு, தகுதியான வீரர்கள் இல்லாதது காரணமல்ல, தகுதியான வீரரை கண்டறிய முடியாததுதான் காரணம்.

அதன் எதிரொலியாக உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்று வெளியேறியது. மிடில் ஆர்டர் சொதப்பல் தான் அதற்குக்காரணம். இதையடுத்து உலக கோப்பை முடிந்ததுமே நான்காம் வரிசைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை மேற்கொண்டது இந்திய அணி. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே அணியில் எடுக்கப்பட்டனர். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்குத்தான் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அவர் நான்காம் வரிசையில் இறக்கப்படவில்லை. நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டு, ஐந்தாம் வரிசையில் தான் ஷ்ரேயாஸ் ஐயர் இறக்கப்பட்டார். ரிஷப் பண்ட் 2 போட்டிகளிலுமே சொதப்பிய நிலையில், இரண்டு போட்டிகளிலும் இரண்டு வெவ்வேறு சூழல்களில் ஆடி, தன்னால் சூழலுக்கு ஏற்ப எப்படியும் ஆடமுடியும் என்பதை நிரூபித்து காட்டினார் ஷ்ரேயாஸ் ஐயர். 

இந்நிலையில், புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் ரத்தோரும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோரைத்தான் அவர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வாக பார்ப்பதாக உறுதியாக தெரிவித்துவிட்டார். 

இதற்கிடையே, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன் 48 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை கண்டு வியந்த ஹர்பஜன் சிங், நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்டுள்ள சஞ்சு சாம்சனை இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக இறக்கலாம் என டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். 

உலக கோப்பைக்கு முன்னதாகவே இந்த கருத்தை தெரிவித்திருந்த கம்பீர், ஹர்பஜன் சிங்கின் கருத்துடன் உடன்பட்டு, மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். உலக கோப்பையிலேயே சஞ்சு சாம்சனை நான்காம் வரிசையில் இறக்கலாம் என கம்பீர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது ஹர்பஜன் சிங்கின் டுவீட்டிற்கு பதிலளித்துள்ள கம்பீர், ஆம் ஹர்பஜன்.. தற்போதைய ஃபார்ம் மற்றும் திறமையின் அடிப்படையில் பார்த்தால் சஞ்சு சாம்சன் நிலவின் தென் துருவத்தில் கூட அருமையாக பேட்டிங் ஆடுவார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.