உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு ஆண்டுகளாக அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் பவுலிங் யூனிட் அபாரமாக உள்ளது. 

உலக கோப்பை அணியில் நான்காம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வாகப்போவது யார் என்ற எதிர்பார்ப்புதான் மிகுந்திருந்தது. ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் மாற்று விக்கெட் கீப்பர் என்ற கேள்வி நிறைந்திருந்த வேளையில், நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் என்ற முறையில் முக்கியமான தொடரான உலக கோப்பைக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். 

இதுகுறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனி ஆடாத பட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்கப்படுவார். அந்த வகையில் அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் ஆடநேரிட்டால், அப்போது விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவது அவசியம். எனவே அனுபவம் வாய்ந்த சிறந்த விக்கெட் கீப்பர் என்ற வகையிலும் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க வல்லவர் என்பதாலும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ததாக பிரசாத் தெரிவித்தார். 

ஆனால் கங்குலி உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் எடுக்கப்படாததற்கு ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்த கங்குலி, ரிஷப் பண்ட் குறைந்தது 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடுவார் என்றும் நிறைய உலக கோப்பைகளில் ஆடுவார் என்றும் கங்குலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மீண்டும் ஒருமுறை ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார் கங்குலி. உலக கோப்பையில் இந்திய அணி கண்டிப்பாக ரிஷப் பண்ட்டை மிஸ் செய்யும். எந்த வீரருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை எடுத்திருக்கலாம்? அல்லது எந்த வீரரின் இடத்தில் ரிஷப் பண்ட்டை மிஸ் செய்யும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக ரிஷப்பை இந்திய அணி மிஸ் செய்யும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் ஆடும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கங்குலி ஆலோசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.