உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை தொடரில் ஆடும் இந்திய அணி கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டது. ஒருசில வீரர்களுக்கான இடங்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளது. அவற்றையும் ஆஸ்திரேலிய தொடரில் இறுதி செய்ய தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது. 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர், ஆஸ்திரேலிய தொடர்தான் என்பதால் இத்தொடரில் ராகுல், ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஓராண்டாக மோசமாக சொதப்பிவந்த ராகுல், சஸ்பெண்டிலிருந்து மீண்டுவந்து ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடினார். டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ராகுலுக்கு ஒருநாள் தொடரிலும் வாய்ப்புகள் வழங்கப்படும். ராகுல் உலக கோப்பை அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர் ஒருவர்தான் மாற்று தொடக்க வீரருக்கான ஒரே ஆப்சன். 

உலக கோப்பை தொடருக்கான மாற்று விக்கெட் கீப்பர் ஆப்சனாக ரிஷப் பண்ட்டைத்தான் பார்க்கிறது தேர்வுக்குழு. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்படவில்லை, ரிஷப் பண்ட் தான் எடுக்கப்பட்டுள்ளார். இதிலிருந்தே தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக பறைசாற்றியுள்ளது தேர்வுக்குழு. 

அதேவேளையில் ரிஷப் பண்ட்டும் நன்றாக ஆடினால்தான் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவார். உலக கோப்பையை மனதில்வைத்து ரிஷப் பண்ட்டுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படும் என கேப்டன் கோலி தெரிவித்திருக்கிறார். ஆனால் டி20 தொடரில் ரிஷப் பண்ட் சரியாக ஆடவில்லை. ஒருநாள் தொடரில் அவருக்கான வாய்ப்பை ரிஷப் பண்ட் கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

ஆனாலும் இதுவரை வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ரிஷப் பண்ட், உலக கோப்பையில் ஆடும் அளவிற்கு தகுதி பெற்றுவிட்டார் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பவில்லை. இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் அவர்தான் என்றாலும் தற்போதைய சூழலில் உலக கோப்பையில் ஆடுமளவிற்கு ரிஷப் பண்ட் தகுதி பெற்றுவிட்டதாக கங்குலி கருதவில்லை. 

ஆனால், ரிஷப் பண்ட்டின் துடிப்பான பயமற்ற அதிரடி பேட்டிங்கால், கவர்ந்திழுக்கப்பட்ட முன்னாள் வீரர்கள் பலர், அவர் சில ஓவர்களில் போட்டியையே புரட்டிபோடக்கூடியவர் என்பதால் அவரை உலக கோப்பை அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்திவருகின்றனர்.