உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, உலக கோப்பையில் தோற்று வெளியேறியதற்கு காரணம், மிடில் ஆர்டர் சிக்கல் தான். 2 ஆண்டுகள் தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான மிடில் ஆர்டர் வீரர்களை தேர்வு செய்ய முடியவில்லை. அதன் எதிரொலியாக இந்திய அணி உலக கோப்பையில் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பை தோல்வியை அடுத்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலை கலைந்து வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20க்கான அணியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக மனீஷ் பாண்டே  மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே இந்தியா ஏ அணியிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவருகின்றனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த தொடரில் கூட இந்தியா ஏ அணியில் சிறப்பாக ஆடினர். அதனால் இவர்கள் இருவருக்கும் அணியில் இடம் கிடைத்தது. 

நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட அனுபவ வீரரான ரஹானேவிற்கு மீண்டும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. மீண்டும் ரஹானே ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டார். அதேபோல 19 வயதே ஆன இளம் வீரராக இருந்தால்கூட சூழலுக்கு ஏற்றவாறு முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷுப்மன் கில்லும் கூட அணியில் இடம் கிடைக்கவில்லை. ராகுல் தடையில் இருந்ததால் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான தொடரில் கில் எடுக்கப்பட்டதாகவும் தற்போது ராகுல் ஆடுவதால் கில் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் எனவும் அவர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பதாகவும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார்.

ஆனால் ரஹானே மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் ஒருநாள் அணியில் சேர்க்கப்படாதது குறித்த தனது அதிருப்தியை முன்னாள் கேப்டன் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், ரஹானேவையும் ஷுப்மன் கில்லையும் ஒருநாள் அணியில் எடுக்காதது வியப்பாக இருக்கிறது என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

அணி குறித்த மற்றொரு டுவீட்டில், மூன்று விதமான போட்டிகளுக்கும் முடிந்தவரை ஒரே வீரர்களை களமிறக்கும் விதமாக அணி தேர்வு செய்ய வேண்டும். அதற்கான நேரம் தேர்வுக்குழுவிற்கு வந்துவிட்டது. அப்படி செய்தால் தான் வீரர்களுக்கு தங்களின் ஆட்டம் மீதான நம்பிக்கையும் ரிதமும் கிடைக்கும். மிகக்குறைந்த வீரர்கள் தான் மூன்று விதமான போட்டிகளிலும் ஆடுகின்றனர். சிறந்த அணிகளின் தேர்வு அப்படித்தான் இருக்கும். அணி தேர்வு என்பது அணியின் நலனை கருத்தில் கொண்டு இருக்க வேண்டுமே தவிர அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக இருக்கக்கூடாது என்று கண்டிப்புடன் எச்சரித்துள்ளார்.