ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. 14, 17, 19 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

முதல் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தபோது, இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது. ஸ்மித், வார்னர் இல்லாமலேயே ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றது. இந்நிலையில், இம்முறை வார்னர் மற்றும் ஸ்மித்துடன் சேர்த்து மற்றுமொரு சிறந்த வீரரான லபுஷேனும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஃபின்ச் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் டாப் ஃபார்மில் உள்ளனர்.

Also Read - கோலி லெவலே வேற.. அவரோடலாம் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது.. கம்பீர் தடாலடி

எனவே இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால், இந்த தொடர் இரு அணிகளுக்குமே கடும் சவாலாகத்தான் இருக்கும். 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள கம்பீர், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் டாப் ஃபார்மில் இருக்கும் வார்னர், ஃபின்ச் ஆகியோருக்கு பும்ராவும் ஷமியும் எப்படி வீசி அவர்களை கட்டுப்படுத்த போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். பும்ரா, ஷமி ஆகிய இருவருமே நல்ல வேகத்தில் வீசக்கூடியவர்கள். காற்றிலும் இவர்களது பந்து நல்ல வேகத்தில் செல்லும் என்பதால், வேகமாக வீசியே, அவர்களை வீழ்த்திவிட முடியும்.

Also Read - எந்த பவுலருக்கு விக்கெட் கீப்பிங் செய்வது கடினம்..? ரிதிமான் சஹா அதிரடி.

பும்ராவும் ஷமியும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவதை பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கும். அதனால்தான், உலக கோப்பை அரையிறுதியில் ஷமி ஆடாதது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. உலக கோப்பை முழுவதிலும் இந்திய அணி எடுத்த மோசமான முடிவு, அரையிறுதியில் ஷமியை ஆடவைக்காததுதான். நல்ல ஃபார்மில் இருந்த ஷமியை அரையிறுதியில் உட்கார வைத்தது தவறான முடிவாகும்.

ஷமி மட்டும் உலக கோப்பை அரையிறுதியில் ஆடியிருந்தால், பும்ராவுடன் சேர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அந்தவகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசவுள்ளார்கள். அதைக்காண நான் ஆவலாக இருக்கிறேன். புதிய பந்தில் அவர்கள் வீசும் வேகத்திற்கு, கண்டிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு ரொம்ப கஷ்டம்தான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.